தமிழக அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்கள், தமிழகத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக உள்ளதாக நபார்டு வங்கி தலைவர் ஜி.ஆர்.சிந்தாலா பாராட்டியுள்ளார்.
தேசிய வேளாண்மை, ஊரக வளர்ச்சி வங்கியின் (நபார்டு) தலைவர் ஜி.ஆர்.சிந்தாலா, பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்துள்ளார். சென்னையில் நேற்று முன்தினம் முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசிய அவர், பின்னர் மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேசும்போது, ‘‘விவசாயிகள் நலனுக்காக தமிழக அரசு பல்வேறுதிட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க் கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. விவசாயிகள், செலுத்த வேண்டிய கடன் நிலுவையை குறித்த காலத்தில் செலுத்தும் பட்சத்தில், அவர்கள் செலுத்த வேண்டிய வட்டியை தமிழக அரசே மொத்தமாக ஏற்றுக்கொண்டது.
இதைப் பின்பற்றியே சில மாநிலங்களில் வட்டியில்லா பயிர்கடன் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக வங்கிகளுக்கு 2 சதவீதம் வட்டி மானியத்தையும் தமிழக அரசு வழங்குகிறது’’ என்றார்.
இதைத் தொடர்ந்து, நபார்டு வங்கி தலைவர் சிந்தாலா பேசிய தாவது:
அம்மா உணவகங்கள்
ஆந்திராவைச் சேர்ந்த நான்,பல மாநிலங்களில் பணியாற்றிஉள்ளேன். என் குடும்பம் சென்னையில் வசித்தது. ஒருமுறை பாண்டிபஜாரில் உள்ள அம்மாஉணவகத்தை பார்த்து ஆச்சரியமடைந்த நான், உள்ளே சென்றுசாப்பிட்டேன். சுவை மிகச் சிறப்பாக இருந்தது. அதன் பராமரிப்பும் மிக சுத்தமாக இருக்கிறது. இது பாராட்டுக்குரியது. வெளிமாநிலங்கள் மற்றும் மத்தியஅமைச்சர்களை சந்திக்கும்போது, அம்மா உணவகங்கள் பற்றி தெரிவித்துள்ளேன்.
முன்னேறிய மாநிலமான தமிழகத்தில், அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்கள் மிகச் சிறப்பானவை. அத்துடன், தமிழகத்தின் உள்கட்டமைப்பு வசதிகளும் சிறப்பாக உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆர்.இளங்கோவன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் எல்.சுப்பிரமணியன், நபார்டு வங்கியின் தமிழக மண்டல தலைமை பொது மேலாளர் எஸ்.செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.