மதுரை மாநகருக்குள் வைகை ஆற்றில் ஏற்கெனவே கட்டிய 2 தடுப்பணைகளில் சாக்கடை நீர் மட்டுமே தேங்கும் நிலையில் தற்போது மாடக்குளம் கண்மாய்க்காக மேலும் ரூ.17 கோடியில் ஒரு தடுப்பணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் முக்கிய நீர் ஆதாரமாக மாடக்குளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயக்கு வரக்கூடிய நீர் ஆதாரங்கள் காலப்போக்கில் குறைந்ததால் ஆண்டு முழுவதும் தண்ணீரைத் தேக்க முடியவில்லை.
அதனால், தற்போது இந்த கண்மாய்க்கு நிரந்தரமாக தண்ணீரை கொண்டு வந்து தேக்குவதற்காக வைகை ஆற்றின் குறுக்கே கொடிக்குளம் கிராமம் அருகே தமிழக அரசு ரூ.17 கோடியே 39 லட்சத்து 94 ஆயிரம் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் முடிக்கப்பட்டு பணிகள் தொடக்கப்பட உள்ளது.
இந்த தடுப்பணை கட்டுவதால் மாடக்குளம் கண்மாய், கீழமாத்தூர் கண்மாய், துவரிமான் கண்மாய் ஆகிய கண்மாய்களுக்கு வைகை ஆற்றில் இருந்து நேரடியாக தண்ணீர் வழங்கப்பட்டு இந்த கண்மாய்கள் மூலம் கூடுதல் விவசாய நிலங்கள் பாசனம் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும்,
கொடிக்குளம் கிராமத்தில் வைகை ஆற்றின் குறுக்கே இந்த தடுப்பணை அமைவதால் மாடக்குளம், அச்சம்பத்து, பொன்மேனி, பழங்காநத்தம், எல்லீஸ் நகர், டிவிஎஸ் நகர் மற்றும் எஸ்எஸ் காலனி ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீர் ஆதாரம் அதிகரித்து ஆழ்துளை கிணறுகள் நீர் ஆதாரம் பெருகும் வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனால், நகரின் மையப்பகுதியில் ஏற்கணவே அமைக்கப்பட்ட 2 தடுப்பணைகளால் எந்த பயனும் ஏற்படவில்லை. வைகை ஆற்றில் தண்ணீர் வராததால் இந்த தடுப்பணைகளில் நகரின் சாக்கடை தண்ணீர் மட்டுமே தேங்கி நிற்கிறது.
அதனால், தூர்நாற்றமும், சுகாதார சீர்கேடும் மட்டுமே ஏற்படுகிறது. கடந்த 10 ஆண்டாகவே வைகை அணையில் இருந்து ராமநாதபுரம், சிகவங்கை மாவட்ட குடிநீருக்கு தண்ணீர் திறந்துவிட்டால் மட்டுமே தண்ணீர் வரும். மற்ற நாட்களில் வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து கிடையாது.
அதனால், தண்ணீரே வராத வைகை ஆற்றில் ஏற்கெனவே தடுப்பணைகள் கட்டி எந்தப் பயனும் இல்லாதநிலையில் மீண்டும் மாடக்குளம் கண்மாய்க்காக மற்றொரு தடுப்பணை அமைப்பது எந்தளவுக்கு பயன்தரும் என்பது தெரியவில்லை.
தண்ணீரே வராத வைகை ஆற்றில் தொடர்ந்து தடுப்பணைகள் கட்டுவதால் அதில் சாக்கடை நீர் மட்டுமே தேங்குவதாக பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.