சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய இரண்டு, மூன்றடுக்கு கல்வட்டங்கள் காணப்படுகின்றன.
காளையார்கோவில் அருகே வேலாங்குளம் பகுதியில் கல்வட்டம் என்னும் ஈமக்காடுகள் அதிகளவில் காணப்படுகின்றன.
இதனை தொல்லியல் ஆர்வலர் காளையார்கோவில் ஜெமினிரமேஷ் உதவியுடன் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத்துறை கவுரவ விரிவுரையாளர் தி.பாலசுப்ரமணியன் ஆய்வு செய்தார்.
இதுகுறித்து தி.பாலசுப்ரமணியன் கூறியதாவது: இங்குள்ள கல்வட்டம் மூலம் மனிதன் வாழ்ந்தற்கான அடையாளங்களை பார்க்க முடிகிறது. இது 3500 ஆண்டுகளுக்கு முந்தைய நாகரீகமாக இருக்கலாம். பெரும்பாலும் கல்வட்டங்கள் ஓரடுக்காக தான் இருக்கும். ஆனால் இங்கு இரண்டு, மூன்றடுக்குள்ள கல்வட்டங்களாக காணப்படுகின்றன.
மேலும் மூன்று வட்ட வடிவ வரிசைகளில் மிகப் பெரியதாக காணப்படுகிறது. இந்த கல்வட்டத்தை சுற்றி 12 பெரிய கற்கள் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் அனைத்து திசைகளிலும் கல்வட்டங்கள் காணப்படுகின்றன. அதில் ஒரே ஒரு கல் உயரமான கல்லாக நடப்பட்டு உள்ளது.
அதனை சுற்றி சிறிய கற்கள் நடப்பட்டு இருக்கின்றன. சிவகங்கை மாவட்டத்தில் பழங்கால தொன்மை நாகரீகம் வெளிவந்து கொண்டிருப்பது நமக்கு மிகுந்த சந்தோஷத்தை தருகிறது. இப்பகுதியை வரலாற்று சின்னங்காக பாதுகாக்க வேண்டும், என்று கூறினார்.