தமிழகத்திற்கெனத் தனியான பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்த முன்வர வேண்டும் என தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
பிஎம் கிசான் திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து தமிழக வேளாண்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடியுடன் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட பி.ஆர்.பாண்டியன், கூட்டத்தில் தான் வலியுறுத்திய கோரிக்கைகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:
"மோடி பிரதமராகப் பொறுப்பேற்றபின் தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தைத் தனியார் மயமாக்கியதன் விளைவு, காப்பீட்டு நிறுவனங்கள் சேவையைக் கைவிட்டு ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகள் மற்றும் மத்திய - மாநில அரசுகளிடம் பிரீமியமாகப் பெற்றுக் கொள்ளை லாபம் பெறுகின்றனர்.
தமிழகம் இரு பருவ மழையைப் பெற வேண்டிய நிலையில், பேரிடரால் விவசாயம் பேரழிவைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. அப்படிப் பாதிப்புக்கு உள்ளாகும் ஆண்டுகளில், பிரீமியம் பெறுவதில் காட்டும் ஆர்வத்தைக் காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்குவதில் காட்டுவதில்லை. மேலும், ஊழல் முறைகேடுகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிற்கெனத் தனி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்த முன்வர வேண்டும். மேலும், கடந்த 2019- 20 ஆம் ஆண்டில் காவிரி டெல்டாவில் ஆணைக்கொம்பன் நோயால் பாதிக்கப்பட்ட அனைத்துக் கிராமங்களுக்கும் பாகுபாடின்றி இழப்பீடு வழங்க முன் வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.
வேளாண் திட்டங்களில் எவ்வாறு ஊழல் முறைகேடு நடைபெறுகிறது என்பதையும் ஆதாரத்துடன் எடுத்துரைத்தோம். மாவட்ட ஆட்சியர்களின் ஒப்புதல் பெற்று அறுவடை ஆய்வறிக்கை இறுதிப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினோம்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 அவசரச் சட்டங்களின் பேராபத்துகள் குறித்தும் முதன்மைச் செயலாளர்களிடம் எடுத்துரைத்து அதனைக் கைவிட அழுத்தம் கொடுக்கும்படியும் வலியுறுத்தினோம். எங்களின் கோரிக்கைகளை முதல்வர் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு காண விரைந்து நடவடிக்கை எடுப்பதாக வேளாண் செயலர் உறுதி அளித்தார். பயிர் இழப்பீடு வழங்குவதில் உள்ள பாகுபாடுகள், முறைகேடுகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர்களிடம் அறிக்கை பெற உத்தரவிடுவதாகவும் அவர் தெரிவித்தார்''.
இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.