தமிழகம்

தமிழக முதல்வர் குமரி வரும்போது கருப்பு பலூன்களை பறக்கவிட்டு எதிர்ப்பு: நாகர்கோவில் எம்எல்ஏ அறிவிப்பால் பரபரப்பு

எல்.மோகன்

தமிழக முதல்வர் கே.பழனிசாமி குமரி மாவட்டத்திற்கு வரும்போது நாகர்கோவில் சாலைகளை சீரமைக்கப்படாததை கண்டித்து கருப்பு பலூன்களை பறக்க விட்டு எதிர்ப்பை காண்பிக்கப் போவதாக சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

நாகர்கோவிலில் திமுக மாவட்ட அலுவலகத்தில் குமரி கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் ஜோசப்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., தீர்மானங்களை விளக்கி பேசினார்.

அப்போது, நாகர்கோவில் நகர சாலைகள் அனைத்தையும் உடனடியாக சீரமைக்காவிட்டால் 23ம் தேதி குமரி வரும் தமிழக முதல்வர் கே.பழனிசாமிக்கு பொதுமக்களை திரட்டி கிழக்கு மாவட்ட திமுக சார்பில கருப்பு கொடி காட்டுவது, கருப்பு பலூன்களை பறக்க விட்டு எதிர்ப்பை காண்பிப்பது எனவும், திமுக முப்பெரும் விழாவினை நகர, ஒன்றியங்கள் வாரியாக நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., கூறுகையில்; முதல்வர் கே.பழனிசாமி குமரி வருவதை முன்னிட்டு நாகர்கோவிலில் சில முக்கிய சாலைகள் அவசர அவசரமாக சரிசெய்யப்பட்டு வருகிறது.

ஆனால் பல சாலைகள் சரிசெய்யப்படாமல் மிக மோசமாகவே காணப்படுகிறது.

எனவே முதல்வர் வருகையின்போது எங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்யும் விதத்தில் கருப்பு கொடியுடன் போராட்டம் நடத்துவதுடன் கருப்பு பலூன்களையும் பறக்கவிட உள்ளோம் என்றார்.

SCROLL FOR NEXT