தமிழகம்

பணியில் சேர்ந்த 2-வது நாளில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட விஏஓ: உதவி ஆட்சியர் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை

கி.மகாராஜன்

பணியில் சேர்ந்த 2-வது நாளில் விஏஓ ஒருவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உதவி ஆட்சியர் பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது.

நெல்லையைச் சேர்ந்த அரிமுத்துக்குமார், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

திருச்சி மாவட்டத்தில் 2015-ல் கிராம நிர்வாக அலுவலராக நியமிக்கப்பட்டேன். அங்கு 5 ஆண்டுகள் வரை பணபுரிந்தேன். கடந்த 17.8.2020-ல் நெல்லை மாவட்டத்துக்க இடமாறுதல் செய்யப்பட்டு பிப்ரவரி மாதம் ஆகஸ்ட் மாதம் வரை சத்திரம் புதுக்குளத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்தேன். பின்னர் பாளையங்கோட்டை அருகேயுள்ள கொங்கந்தான்பாறைக்கு மாற்றப்பட்டேன்.

அங்கு ஆக. 17-ல் பணியில் சேர்ந்தேன். 2 நாள் பணிபுரிந்த நிலையில் ஆக. 19-ல் கொங்கந்தான்பாறை கிராம நிர்வாக அலுவலர் பணியிடத்தை காலியிடமாக அறிவித்து, அப்பணியிடத்தை பொது இடமாறுதல் கலந்தாய்வுக்கு மாற்றம் செய்து, என்னை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி நெல்லை உதவி ஆட்சியர் உத்தரவிட்டார். அவரது உத்தரவை ரத்து செய்து கொங்கந்தான்பாறையில் கிராம நிர்வாக அலுவலராக பணியில் தொடர அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பினேகாஸ் வாதிட்டார். பின்னர், மனுதாரரை பணியில் சேர்ந்து 48 மணி நேரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியது ஏற்கும்படி இல்லை.

இதனால் அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை மனுதாரர் கொங்கந்தான்பாறையில் பணியை தொடரலாம்.

அவரது பணியில் குறுக்கீடு செய்யக்கூடாது. மனுவுக்கு அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை 4 வாரத்துக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

SCROLL FOR NEXT