முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ராமர் - லட்சுமணனைப் போன்று புரிதலுடன் செயல்படுவதாக, தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று (செப். 18) மாலை உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. துணை ஒருங்கிணைப்பாளர்கள் முனுசாமி, வைத்திலிங்கம், அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் இதில் பங்கேற்றனர்.
முன்னதாக, இக்கூட்டத்தில் பங்கேற்க துணை முதல்வர் ஓபிஎஸ் வந்தபோது அவருக்கு ஆதரவாக அவருடைய ஆதரவாளர்கள் கோஷமிட்டனர். தொடர்ந்து, முதல்வர் பழனிசாமி வந்தபோது, அவரது ஆதரவாளர்கள் கோஷமிட்டனர். ஏற்கெனவே முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், தொண்டர்களின் இந்த முழக்கம் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சென்னை, திருவொற்றியூரில் இன்று (செப். 19) அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், அனைவரது கருத்துகளையும் பெறவே அவசரக் கூட்டம் நடத்தப்பட்டது எனவும், அதிமுக 'அன்பு' என்னும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
"அவசரக் கூட்டம் கூட்டுவது, தங்களுடைய கருத்துகளை வெளிப்படுத்துவதற்காகத்தான். அதில், கருத்துகளைச் சொல்லும்போது அதற்கான விளக்கங்களும் நியாயங்களும் விவாதிக்கப்படுகின்றன. அது, காரசாரமாக இருந்ததா, இனிப்பாக இருந்ததா, தேன் போல சுவையாக இருந்ததா என்பது எங்களுக்குத்தான் தெரியும். நாங்கள்தான் அக்கூட்டத்தில் பங்கேற்றோம். ராமர் - லட்சுமணனுக்கு இருக்கக்கூடிய புரிதல், முதல்வர் - துணை முதல்வருக்கு இடையே இருக்கிறது" என அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.