ஆன்லைன் டெண்டர் முறையில் டெண்டர் முன்வைப்பு தொகையை வங்கிகளில் நேரடியாக செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஞானவேல் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருச்சி மாநகராட்சியில் நூறு குப்பை அள்ளும் வாகனங்களுக்கு ரூ.2.20 கோடிக்கு பேட்டரி வாங்க ஜூன் 12-ல் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. டெண்டர் விண்ணப்பம் சமர்பிக்க ஜூலை 15 கடைசி நாளாகும். அந்த தேதிக்கு முன்பு டெண்டர் முன்வைப்பு தொகை ரூ.4.40 லட்சத்துக்கு காசோலை வழங்க வேண்டும்.
எங்கள் நிறுவனம் டெண்டருக்கு விண்ணப்பித்தது. டெண்டர் முன்வைப்புத் தொகையையும் செலுத்தினோம். ஆனால் முன்வைப்பு தொகைக்கான காசோலையை வழங்கவில்லை என்று கூறி எங்கள் நிறுவனத்தின் டெண்டர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை ரத்து செய்து எங்கள் நிறுவனத்தை டெண்டரில் அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:
ஆன்லைனில் டெண்டர் கோரும் போது ஒப்பந்த்திற்கான முன்வைப்புத் தொகையாக காசோலையாக செலுத்த வேண்டும் என வலியுறுத்துவது சரியான நடைமுறையல்ல.
இனிவரும் காலங்களில் டெண்டர்களுக்கான முன்வைப்புத் தொகையை வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
அதற்காக தனி வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும். அந்தக் கணக்கில் ஒப்பந்ததாரர்கள் டெண்டர் முன்வைப்புத் தொகையை செலுத்த வேண்டும்.
திருச்சி மாநகராட்சி டெண்டரை ரத்து செய்து புதிய டெண்டர் வெளியிட வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.