தமிழகம்

மொரீசியஸுக்கு ஏற்றுமதியான மதுரை கிடை மாட்டு சாணம்: ஊரடங்கால் கிடை மாட்டு தொழில் அழியும் அபாயம்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

விவசாயம் மற்றும் மதிப்புக் கூட்டுப் பொருட்கள் தயாரிக்க மதுரை கிடை மாட்டுச் சாணம், மொரீசியஸ் நாட்டுக்கும், கேரளாவுக்கும் அனுப்பப்பட்டது. தற்போது கரோனா ஊரடங்கால் அழியும் அபாயத்தில் உள்ள இந்தத் தொழிலை மீட்டெடுக்க, தொழுவம் என்ற அமைப்பு மூலம் திருவாதவூர் அருகே கிடை மாட்டு சாணப் பண்ணை ஆய்வகம் உருவாக்கப்பட்டுள்ளது.

கிராமங்களில் கால்நடை வளர்ப்பை பிரதானமாகக் கொண்டிருப்பவர்கள், கிடை மாடு வளர்க்கும் தொழில் செய்கிறார்கள். இவர்கள், பகலில் 100 முதல் 500 ஆடு, மாடுகளை ஒருங்கிணைத்து மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வர். இரவில் ஏதாவது ஒரு வயலில் சுற்றி வலை கட்டி, அதற்கு நடுவில் இந்த ஆடு, மாடுகளை அடைத்துக் கிடை போடுவர். இந்தக் கால்நடைகளின் சாணமும், கோமியமும் அதிக மகசூலை அள்ளிக் கொடுக்கும் சிறந்த இயற்கை உரமாகும். ஆனால், முன்புபோல கிடைமாட்டு உரத்துக்கு தற்போது வரவேற்பு இல்லை. மண் புழு உரம், ரசாயன உரத்தையுமே பெரும்பாலான விவசாயிகள் பயன்படுத்துகிறார்கள்.

தமிழகத்தில் இருந்து கிடை மாட்டுச் சாணத்தை கிலோ ரூ.4 முதல் ரூ.5 வரை விலை கொடுத்து கேரளாவைச் சேர்ந்தோர் வாங்கிச் செல்கிறார்கள். அவர்கள், பணப் பயிர்களுக்கு இந்த வகை உரத்தை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

தற்போது கரோனா ஊரடங்கால் போக் குவரத்து இல்லாததால் கேரளாவில் இருந்து கிடைமாட்டுச் சாணத்தை வாங்க ஆட்கள் வரவில்லை. அதனால், கிடை மாட்டுத் தொழில் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கிடை மாடுகளைப் பாது காத்து, இத்தொழிலை மீட்டெடுக்க நபார்டு வங்கி உதவியுடன் மதுரை வேளாண்மைக் கல்லூரி வழிகாட்டுதலில் 20 இளம் தொழில்முனைவோர் ‘தொழுவம்’ கிடைமாட்டு சாண ஆய்வகம் மற்றும் பண்ணையை ஒத்தக்கடை அருகே திருவாதவூரில் தொடங்கி உள்ளனர்.

இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரி உதவிப் பேராசிரியருமான கபிலன் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் சேகரிக்கப்படும் கிடை மாட்டுச் சாணம், கேரளாவுக்கும், மொரீசியஸ் நாட்டுக்கும் அனுப்பப்படுகிறது. மொரீசியஸில் இந்தச் சாணத்தை விவசாயத்துக்கு மட்டுமின்றி, பல்வேறு மதிப்புக் கூட்டுப் பொருட்களை தயாரிக்கவும் பயன்படுத்துகிறார்கள்.

கிடை மாடுகளைப் பொறுத்தவரை 90 சதவீதம் பசுமாடுகள்தான் இருக்கும். 10 சதவீ தம் மட்டுமே காளை மாடுகள் இருக்கும். இவர்கள் பாலைக் கறந்து விற்பதில்லை. கிடை போடுவதில் கிடைக்கும் வருவாயிலேயே இவர்களின் வாழ்வாதாரம் உள்ளது.

கிடை மாட்டுச் சாணத்தில் இருந்து விபூதி, பத்தி, பஞ்சகவ்யம் மற்றும் கலைப் பொருட்களைத் தயாரிக்கலாம். தற்போது நாங்கள், தமிழகத்தில் 130 கிடைகளில் 50 ஆயிரம் மாடுகளை ஒருங்கிணைத்துள்ளோம். இந்தச் சாணத்தைப் பயன்படுத்துவதால் ஏற் படும் நன்மை குறித்து விவசாயிகளிடையே புரிதலை ஏற்படுத்தவே இந்த அமைப்பை தொடங்கி உள்ளோம். இந்த கிடை மாட்டு தொழிலுக்குப் பெரும்பாலும் புளிக்குளம் மாடு கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது இந்தத் தொழில் அழிவதால் இந்த மாட்டினமும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT