தமிழகத்தில் பல்கலை. கல்லூரி களில் இளநிலை, முதுகலை இறுதியாண்டு மாணவர்களை தவிர, எஞ்சிய மாணவர்களுக்கான பருவத் தேர்வு, அரியர்ஸ் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. உயர் கல்வித்துறை அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்கு பின், இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வீடுகளில் இருந்தபடியே தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி, வாட்ஸ்-ஆப், இ-மெயில் குரூப் மூலம் வினாக்கள் அனுப்பி, தேர்வெழுதி முடித்த ஒரு மணி நேரத்திற்குள் ஆன்லைன் (பிடிஎப் பைல்) மூலமாக அல்லது தபாலிலும், கல்லூரிகளில் நேரிலும் விடைத்தாள்களை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இதன்படி, காமராசர் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உட்பட்ட அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், பல்கலை. உறுப்பு கல்லூரிகள், பல்கலை. கல்லூரிகள் என 30 தன்னாட்சி கல்லூரி உள்பட 106 கல்லூரிகளைச் சேர்ந்த இளநிலை, முதுகலை மற்றும் பல்கலையிலுள்ள 49 முதுகலை பாடப் பிரிவுகள் மற்றும் எம்சிஏ இறுதியாண்டு மாணவ, மாணவியர் என 21,399 பேரும் அந்தந்த கல்லூரி நிர்வாகம் சார்பில், தேர்வு முறை பற்றி தகவல் தெரிவித்து, ஒத்திகை பார்க்கப்பட்டது. திட்டமிட்டபடி நேற்று தேர்வு நடந்தது. காலை 9 மணிக்கு பல்கலை. தேர்வுத்துறை மூலம் அனைத்துக் கல்லூரி முதல்வர்கள், பொறுப்பாளர்களுக்கும் வினாக்கள் ஆன்லைனில் அனுப்பி வைக்கப்பட்டு, 9.45 மணிக்குள் மாணவர்களுக்கு வாட்ஸ் – ஆப், இ-மெயிலில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. வீடுகளில் இருந்து மாணவர்கள் தேர்வெழுதினர்.
அசாரூதீன்(பி.காம்), சர்மிளா (எம்பிஏ) உள்ளிட்ட தேர்வெழுதிய மாணவர்கள் சிலர் கூறுகையில், ‘‘பல்கலை. கல்லூரிகளில் வழங்கிய ‘அடோப் ஸ்கேனர்’ மூலம் விடைத்தாள்களை சுலபமாக அனுப்ப முடிந்தது. கிராமப்புறங்களில் தேர்வெழுதிய சிலருக்கு வாட்ஸ்- ஆப், இ-மெயிலில் வினாக்கள் பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் இல்லை என்றாலும், தேர்வு முடிந்து பிடிஎப்- பைலாக மாற்றி, மெயிலில் அனுப்ப சிரமம் ஏற்பட்டது. பெரும்பாலான மாணவர்கள் சரியான நேரத்தில் விடைத்தாள்களை அனுப்ப முடியவில்லை. விடைத்தாள்களை கல்லூரி வழங்கும் மெயிலில் அனுப்புவதில் சிரமம் இருப்பதால், வாட்ஸ் ஆப் மூலம் அனுப்ப அனுமதிக்க வேண்டும்’’ என்றனர்,
பல்கலை. தேர்வுத் துறை கூறுகையில், ‘‘80 சதவீதத்துக்கு மேலான மாணவர்கள் ஆன்லைன் தேர்வை எழுதினர். ஓரிரு இடங்களில் இருந்த நடைமுறை சிக்கலும், உடனுக்குடன் தீர்க்கப் பட்டது. அடுத்தடுத்த தேர்வுகளில் இது சரியாகி விடும்,’’ என்றனர்.