தமிழகம்

தற்காலிக பேருந்து நிலையங்களில் அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் பயணிகள்

பெ.ஸ்ரீனிவாசன்

திருப்பூரில் செயல்படும் தற்காலிக பேருந்து நிலையங்களில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் பரிதவித்து வருகின்றனர்.

திருப்பூரில் ரூ.1,000 கோடியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், குடிநீர், நவீன பேருந்து நிலையம், பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடம், சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் ஆலை, சந்தைகள் மேம்படுத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தை இடித்து, நவீன பேருந்து நிலையம் கட்டும் பணியும், அருகில் உள்ள முத்துப்புதூர் பள்ளிக் கட்டிடத்தை அகற்றிவிட்டு, அடுக்குமாடி வாகன நிறுத்தம் கட்டும் பணியும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டதால், யுனிவர்சல் திரையரங்கு அருகிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு பகுதியிலும், கோவில்வழி பகுதியிலும் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், ஈரோடு, சேலம் மார்க்கமாக செல்லும் புறநகர் பேருந்துகள் மற்றும் அவிநாசி சாலை, பெருமாநல்லூர் சாலை, ஊத்துக்குளி சாலை வழியாகச் செல்லும் நகரப் பேருந்துகள் ஆகியவையுனிவர்சல் திரையரங்கு அருகேயுள்ளபேருந்து நிலையத்திலும், பல்லடம் வழியாக கோவை, உடுமலை, பொள்ளாச்சிசெல்லும் பேருந்துகள் ஆட்சியர் அலுவலக பேருந்து நிலையத்திலிருந்தும், தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் கோவில்வழி பகுதியிலிருந்தும் செல்கின்றன.

இதுதவிர, காங்கயம் மார்க்கமாகச் செல்லும் நகரப் பேருந்துகள் பழைய அரசு மருத்துவமனை அருகிலிருந்தும், பல்லடம் மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையம் அருகிலிருந்தும், மங்கலம் மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் மாநகராட்சி அலுவலகம் முன்பிருந்தும், அவிநாசி வழியாக கோவை செல்லும் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திலிருந்தும் செல்கின்றன. இவ்வாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தாலும், தற்காலிக பேருந்து நிலையங்களில் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, யுனிவர்சல் திரையங்க பேருந்து நிலையத்தில் கழிப்பறை வசதிகள் இல்லாததால், பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.

இதுகுறித்து சேலத்தைச் சேர்ந்த கே.சுரேந்தர் என்ற பயணி கூறும்போது, "கழிப்பறை வசதி இல்லாததால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். குறிப்பாக, பெண்கள் நிலை பரிதாபமாக உள்ளது.

இலவச குடிநீர் வசதியும் இல்லை"'என்றார். அப்பகுதியைச் சேர்ந்த கனகராஜ் கூறும்போது, "கோவில்வழி பேருந்து நிலையத்தில் கழிப்பிட வசதி உள்ளது. ஆனால், குடிநீர் வசதியோ, உணவு கிடைப்பதற்கான வசதிகளோ இல்லை. ஆவின் பாலகமாவது திறக்கப்பட்டிருக்க வேண்டும்" என்றார்.இதேபோல, ஒரு பேருந்து நிலையத்தில் வந்திறங்கும் பயணிகள், அடுத்த பேருந்து நிலையத்துக்குச் செல்வதற்கான இணைப்பு பேருந்து வசதிகளையும், அதுகுறித்த தகவல்களையும் முறைப்படுத்த வேண்டும்" என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் கே.சிவக்குமார் கூறும்போது, "தற்காலிக பேருந்து நிலையங்களில் குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்து தரப்படும்" என்றார்.

SCROLL FOR NEXT