தமிழகம்

பாலைவனமாக மாறிய வட்டமலைக்கரை ஓடை அணை: பின்னலாடை நிறுவனங்களுக்கு பணிக்கு சென்ற விவசாயிகள்

இரா.கார்த்திகேயன்

திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டம் வெள்ளகோவில் அருகே தாசவ நாயக்கன்பட்டியில் அமைந்துள்ளது வட்டமலைக்கரை ஓடை அணை. இந்த அணை கட்டுமானப் பணி முடிந்து 1980-ம்ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. 860 ஏக்கர்பரப்பளவு, 2 கிமீ. நீளம் கொண்ட இந்த அணை ரூ.1.90 கோடியில் கட்டப்பட்டது. திருமூர்த்தி அணையில் இருந்து,பி.ஏ.பி. கால்வாய் மூலமாகவும், பல்லடம், காங்கயம் பகுதியிலுள்ள பி.ஏ.பி. வாய்க்கால் கசிவுநீர் மூலமாகவும் வட்டமலைக்கரை ஓடை அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

உத்தமபாளையம், லக்கோ நாயக்கன் பட்டி, முலையாம்பூண்டி, புதுப்பை, வெள்ளகோவில் நகராட்சி பகுதிகள்என, பல்லாயிரக்கணக்கான மக்கள் மற்றும் விவசாயிகளின் குடிநீர் மற்றும் ஆண்டுக்கு 6,043 ஏக்கர்பாசனப் பரப்பு பயன்பெற்று வந்தது.ஆனால்,இன்றைக்கு குடிப்பதற்குகூட நீரின்றி வாழ வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தற்போது, அணைப் பகுதி கிராம மக்களே குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை நீடிக்கிறது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பொய்த்துவிட்டது. நிலம் வைத்துள்ள பலர், அவற்றை விற்பனை செய்துவிட்டு திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு வாராந்திர கூலிகளாகமாறிவிட்டனர். விவசாய நிலங்களை விட்டு வெளியேறி, பலர் கால்நடைகளை கூலிக்கு மேய்க்கும் பணிக்கும், பனியன் துணி கழிவுகளை அரைத்து தரும் ஆலைக்கும் கூலிகளாக சென்றுவிட்டனர் என்கிறார் விவசாயி காளிமுத்து.

1997-ம் ஆண்டு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பின்னர் திறக்கப்படவில்லை. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகளுக்கு பயன்படாமல் சீமைக்கருவேல முள்காடாக அணை காட்சியளித்தது. பிஏபி- யில் உபரியாக நீர் இருக்கும் காலங்களில், வட்டமலைக்கரை அணைக்கு தண்ணீர் கொடுக்க வேண்டுமென அரசாணை உள்ளது. ஆனால், பல ஆண்டுகளாக தண்ணீர் வரவில்லை. அமராவதி உபரிநீரை தாராபுரம் வழியாக வட்டமலைக்கரை அணைக்கு கொண்டுசெல்ல 20 கி.மீ நீளத்துக்கு வாய்க்கால் வெட்ட திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.

வட்டமலைக்கரை ஓடை அணைக்குள்நூற்றுக்கணக்கான ஏக்கரில் விளைந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற அரசு முன்வர வேண்டும் என்கின்றனர் அப்பகுதி விவசாயிகள்.

இதுதொடர்பாக வட்டமலைக் கரை ஓடை நீர்த்தேக்க பாசன விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் க.பழனிசாமி கூறும்போது, "நீர்த்தேக்கத்தில் இருந்து இடது மற்றும் வலது வாய்க்கால் இரண்டு உள்ளன. இடது வாய்க்காலில் 6 கிராமங்களும், 30 குக்கிராமங்களும்பயன்பெறுகின்றன.வலது வாய்க்காலில்6 கிராமங்களும், 35 குக்கிராமங்களும் பயன்பெறுகின்றன. நீர்த்தேக்கத்தின் பரப்பு 785 ஏக்கர். அமராவதி ஆற்றின்உபரி நீரை வட்டமலைக்கரை ஓடைநீர்த்தேக்கத்துக்கு கொண்டுவந்துவிட்டால்கூட, உபரிநீர் அனைத்தும் அமராவதி ஆற்றுக்கு செல்லும் வகையில் அமைந்துள்ளது.

2016-ம் ஆண்டு காங்கயம் பொதுக்கூட்டத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பேசும்போது, ‘வட்டமலைக்கரை ஓடை நீர்த்தேக்கத்துக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும்’ என்றார்.

இப்பிரச்சினை தொடர்பாக, தற்போதைய முதல்வர் பழனிசாமியை இருமுறை சந்தித்து பேசினோம். இரண்டு பொறியாளர்கள் பம்பிங் திட்டத்துக்கு சர்வே செய்துவிட்டு சென்றனர். ஏற்கெனவே, வட்டமலைக்கரை ஓடை நீர்த்தேக்க உபரி நீர் திட்டத்துக்கு ரூ.255 கோடி மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. திருப்பூர் மாவட்ட எல்லையான அலங்கியத்தில் இருந்து வாய்க்கால் வெட்டி வருவதில் இருந்து, இந்த திட்டம் நிலுவையில் உள்ளது.” என்றார்.

பொதுப்பணித் துறை அதிகாரிகள், ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது, "அணைக்கு நீர் கொண்டுவருவது தொடர்பான பொதுப்பணித் துறை அதிகாரிகள் குழு விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாகத் தான் பம்பிங் திட்டத்துக்கு சர்வே செய்யப்பட்டது. கடன் உதவி மற்றும் அரசின் நிதி ஆதாரங்களைக் கொண்டுதான் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற முடியும். சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படும். விவசாயிகள் தரப்பில்தொடர்ந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. நிதி மற்றும் மாநில அரசின் கொள்கை முடிவுகளை பொறுத்துதான் அடுத்த கட்ட பணிகளை தொடங்க முடியும்" என்றார்.

SCROLL FOR NEXT