தமிழக மாணவர்கள் நலனில் அக்கறை இருந்தால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் என, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அக்கட்சியின் முப்பெரும் விழா, சென்னை புரசைவாக்கத்தில் நேற்று (செப். 18) நடைபெற்றது. இதில், அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நாஞ்சில் சம்பத், சுப. வீரபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர். 30 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவில் உள்ள முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை உதயநிதி வழங்கினார்.
இதையடுத்து, கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசிய உதயநிதி, தமிழக மாணவர்கள் நலனில் அக்கறை இருந்தால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் என தெரிவித்தார்.
மேலும், "தமிழகம் தற்போது அதிமுக ஆட்சியாலும் மத்தியில் உள்ள பாஜக ஆட்சியாலும் அடிமைப்பட்டுக் கிடக்கின்றது. நீட் தேர்வால் நாம் 13 உயிர்களை இழந்திருக்கிறோம். நீட் தேர்வு தேவையில்லை என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நீட் தேர்வில் விலக்கு வாங்கி விடுவோம் என நம்மை ஏமாற்றுகின்றனர்.
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த கோரியும் நாம்தான் போராட்டம் நடத்தினோம். போராட்டம் நடத்தி இரண்டாவது நாளில் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் நிச்சயம் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். நீட் தேர்வை எப்படி ரத்து செய்ய வேண்டும் என எங்களுக்குத் தெரியும், தலைவருக்குத் தெரியும். எப்படி ரத்து செய்வோம் என்ற ரகசியத்தை சொல்லுங்கள் என்று ஆட்சியாளர்கள் கேட்கின்றனர். ஒரேயொரு ரகசியம்தான். மக்கள் நன்றாக இருக்க வேண்டும், மாநில உரிமைகள் பறிபோக கூடாது என நினைத்தாலே போதும். அந்த ஆளுமை திறன் திமுக தலைவருக்குத்தான் இருக்கிறது" என தெரிவித்தார்.