தமிழகத்திலுள்ள சமண கோயில்கள், கல்வெட்டுகள் தொடர்பாக ரூ.90 லட்சத்தில் 4 ஆண்டுகள் உழைப்பில் டிவிடியை புதுச்சேரி பிரெஞ்ச் ஆய்வு நிறுவனம் உருவாக்கியுள்ளது. இப்பணி தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது.
புதுச்சேரி பிரெஞ்ச் ஆய்வு நிறுவனம் தமிழகத்திலுள்ள கோயில்கள், சிலைகள், ஓவியங்கள் தொடங்கி பல ஆய்வுகளை செய்து வருகிறது. வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள் மீட்புக்கும் இந்த ஆய்வுகள் உதவியாக உள்ளன. மேலும் புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு மையம் பைரவர், புதுச்சேரி அன்றும்-இன்றும், தாராசுரம் கோயில் தொடர்பாக சிடி வெளியிட்டுள்ளது. தற்போது சமணத்தை பற்றி முழு ஆய்வு செய்து டிவிடி தயாரித்துள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் முருகேசன் ‘தி இந்து'விடம் கூறியதாவது:
தமிழகத்திலுள்ள சமண கோயில்கள் தொடர்பாக டிவிடி தயாரித்து வருகிறோம். 4 ஆண்டு கால பணிகள் தற்போது நிறைவ டையும் நிலையில் உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள சமணம் சார்ந்த 459 இடங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. அதில் 120 சமணக் கோயில்கள், குகை கோயில்கள், 500 கல்வெட்டுகள், சமணர்கள் படுத்திருந்த கற்படுகைகள், சமணர்களின் 13 வகை பண்டிகைகள், 7,873 அபூர்வ படங்கள் இடம்பெற்றுள்ளன.
மாவட்டம் வாரியாக எளிதாக பார்க்கும் வகையில் வடிவமைத் துள்ளோம். அத்துடன் வரைபடம் மூலம் அக்கோயில்களின் தகவல்களை அறிய முடியும். தமிழ் சமணர்கள் திகம்பரர் என்றழைக் கப்படுகிறார்கள். டிவிடியை பார்த் தால் சமண தலங்களை நேரில் பார்த்த திருப்தி கிடைக்கும். இதில் இடம்பெற்றுள்ள சமண தலங்கள் அனைத்துக்கும் நேரில் சென்றடைவது கடினம். பல இடங் கள் மலை குகைகளில் இருக்கும்.
அக்கால சமணர்கள், துறவிகள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை அறிய முடியும். தமிழ் மொழிக்கு ஏகப்பட்ட தொண்டினை சமணர்கள் செய்துள்ளனர். மலைசார்ந்த பகுதியில் இருந்துகொண்டு, அப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு தமிழ் சொல்லி தந்துள்ளனர். உடல்நிலை சரியில்லாதோருக்கு மூலிகை வைத்தியம் செய்துள்ளனர். மருந்து குழிகளை பல இடங்களிலும் பார்க்க முடிகிறது.
சமணர்களின் தலங்கள் விழுப்புரம், திருவண்ணாமலை வேலூர், நாமக்கல், கரூர், மதுரை, புதுகை, திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகளவில் உள்ளன. வட தமிழகத்தில் கோயில்களும், தென் தமிழகத்தில் குகைகளும் அதிகம் உள்ளன. சமண கோயில்கள் பல மறைந்துவிட்டன. மலைகளில் இருந்த தலங்கள், பாறைகள் உடைத்து அகற்றப்பட்டதால் காணாமல் போய்விட்டன.
சமணக்கோயில்கள் தொடர் பான டிவிடி தயாரிப்புக்கு புதுச்சேரியைச் சேர்ந்த உக்காமிசந்த் ஜெயின், அகில இந்திய திகம்பரர் ஜெயின் கூட்டமைப்பைச் சேர்ந்தோர் நிதி உதவி தந்தனர். அத்துடன் பிரான்ஸிலுள்ள ஆர்கஸ் (ARCUS) அமைப்பு, புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் ஆகிய அனைவரும் இணைந்து ரூ. 90 லட்சம் நிதி அளித்தனர். அதன் அடிப்படையில் இப்பணிகளை பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் மேற்கொண்டது. தற்போது பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. விரைவில் டிவிடி வெளியாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.