தமிழகம்

சாத்தான்குளம் அருகே இளைஞர் கொலை வழக்கில் 3 பேர் பிடிபட்டனர்: கடத்தப்பட்ட காரும் பறிமுதல்

அ.அருள்தாசன்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே காரில் கடத்தி இளைஞர் த. செல்வன் (32) என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை பிடித்து விசாரித்து வருவதாக அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இந்த வழக்கில் தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், அதிமுக நிர்வாகி திருமணவேல் உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும்.

3 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் வீடியோ பதிவுடன் செல்வன் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும்.

செல்வனின் குடும்பத்துக்கு தமிழக அரசு உரிய நிவாரண உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திசையன்விளை காவல்நிலையம்முன் செல்வனின் உறவினர்கள் இன்று மாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகள் தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று அவர்கள் உறுதி தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் திசையன்விளைக்கு வந்து செல்வனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பாக அவர் கூறும்போது, செல்வன் கடத்தி செல்லப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அரசூர் புதுக்கோட்டையை சேர்ந்த சின்னத்துரை, படுக்கப்பத்துவை சேர்ந்த முத்துராமலிங்கம், சொக்கன்குடியிருப்பை சேர்ந்த ராமன் ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரிக்கிறோம் என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT