மதுரை மீனாட்சியம்மன் கோயில் கிழக்கு கோபுர பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்து வருவதால் அது கோபுரத்தின் ஸ்த்திரதன்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கிழக்கு கோபுர வாசலில் உள்ள வீர வசந்தராயர் மண்டபத்தில் கடந்த 2 ஆண்டிற்கு முன் தீ விபத்து ஏற்பட்டது. இதில், அந்த மண்டபப் பகுதியில் இருந்த கடைகள் தீ விபத்தில் சேமடைந்தன. சேதமடைந்த கிழக்கு கோபுரம் வீரவசந்தராயர் மண்டபம், அதன் பழமை மாறாமல் மேம்படுத்துவதற்கான திட்டம் தயார் செய்யப்பட்டது.
பொதுப்பணித்துறை, இந்து சமய அறநிலையத்துறை, ஐ.ஐ.டி பேராசிரியர்கள், தொல்லியல்துறை ஸ்தபதி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பொறியாளர்கள் குழு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று இந்த மண்டப சீரமைப்பதற்கான பொருட்களை பெறுவதற்கு கள ஆய்வு செய்தனர். தற்போது அப்பணிகள் நிறைவடைந்து டெண்டர் விடும் நிலைக்கு இந்தத் திட்டம் வந்தது. ஆனால், தற்போது வரை இந்தத் திட்டம் தொடங்கப்படவில்லை.
இந்நிலையில் தீ விபத்து நடந்த இந்த கிழக்கு கோபுரத்தில் கீழே இருந்து மேல் பகுதி வரை செடி, கொடிகள் மண்ணில் முளைப்பது போல் அந்த கட்டிடங்களில் முளைத்து நிற்கின்றன.
பாழடைந்த, சிலமடைந்த கட்டிடங்கள், பாலங்கள், பராமரிப்பு இல்லாத கட்டிடங்களில் செடி, கொடிகள் முளைத்திருக்கும். ஆனால், தினமும் பல ஆயிரம் பக்தர்கள் வந்து செல்லும் நகரின் மையமான தமிழகத்தின் முக்கிய புண்ணிய தலமான மீனாட்சியம்மன் கோயில் கோபுரத்தில் செடி, கொடிகள் முளைத்திருப்பது கோயிலுக்கு வரும் பக்தர்கள், மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்றுப்படுக்கை, ஏரி, குளங்களில் நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகளைக் கூட, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் அவற்றை உடனுக்குடன் அகற்றுவார்கள்.
ஆனால், புகழ்பெற்ற கோயிலின் கோபுரத்தில் முளைத்துள்ள செடிகள் அகற்றப்படாமல் இருப்பது, அதன் பராமரிப்பின் நிலையை காட்டுவதாக பக்தர்கள் ஆதங்கமடைந்துள்ளனர்.
இதுகுறித்து கோயில் உயர் அதிகாரியிடம் கேட்டபோது, அந்த செடி, கொடிகளை அகற்ற ஊழியர்களிடம் சொல்லியுள்ளோம். நாளை முதல் அகற்றுவார்கள், ’’ என்றார்.