தமிழகம்

மழைநீர் சேகரிக்க 33 ஊருணிகளைத் தூர்வாரும் பணி தொடக்கம்: தன்னார்வ நிறுவனங்களுடன் கைகோர்த்த மதுரை மாநகராட்சி

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மழைநீர் சேகரிக்க 33 ஊருணிகளை தூர்வாரும் பணியை மதுரை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.

மதுரை மாநகராட்சியில் 33 ஊருணிகள் உள்ளன. இவற்றில் சிலையனேரி ஊருணி, மிளகரணை ஊருணி, கோட்டங்குளம் ஊருணி, பாலூரணி, கம்பன் ஊருணி, உத்தங்குடி ஊருணி, கல்லுடையான் ஊருணி, செம்பூரணி, முத்துப்பட்டி கல்தார் ஊருணி, சூராவளிமேடு ஊருணி ஆகிய 10 ஊரணிகள் ஹைடெக் அராய் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிதியுதவியுடன் தானம் அறக்கட்டளையின் மூலம் தூர்வாரப்பட்டு வருகிறது. இவற்றில் 4 ஊரணிகள் முழுமையாக தூர்வாரப்பட்டுள்ளது. மற்ற ஊரணிகள் தூhர்வாரப்பட்டு வருகிறது.

மேலும், மானகிரி ஊருணி, திருப்பாலை வண்ணான் ஊருணி ஆகிய இரண்டு ஊருணிகள் தண்ணீர் நிறுவனத்தின் மூலமும், ஆனையூர் கோசாகுளம் ஊருணி, அஞ்சல் நகர் ஊருணி, அனுப்பானடி சொக்காயி ஊருணி, உலகம்மாள் கோவில் ஊருணி மாநகராட்சியின் மூலமும், மாட்டுத்தாவணி சாத்தையாறு ஊருணி மிலன் மார்பிள்ஸ் நிறுவனத்தின் மூலமும், உலகனேரி குட்டம் ஊருணி மதுரை கட்டுமான சங்கத்தினர் மூலமும் தூர்வாரப்பட்டுள்ளது.

இதுபோன்று ஏனைய ஊருணிகளும் தூர்வாரப்பட்டு மழைநீர் சேகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 4-வது மண்டலத்தில் உள்ள முத்துப்பட்டி கல்தார் ஊருணி மற்றும் ஹார்விப்பட்டி சூராவளி மேடு ஊருணிகள் ஹைடெக் அராய் மற்றும் தானம் அறக்கட்டளை மூலம் தூர்வாரப்படும் பணிகளையும், கரைகளை உயர்த்தி கட்டும் பணிகளையும், ஊருணிகளுக்கு மழைநீர் வரும் வரத்து கால்வாய்களில் குழாய்கள் அமைக்கும் பணியினையும் மாநகராட்சி ஆணையாளர் விசாகன் ஆய்வு மேற்கொண்டார்.

ஊருணியைச் சுற்றி கரைகளில் நடைபாதை அமைக்குமாறும், மரக்கன்றுகள் நடுமாறும், ஊருணியைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள பொதுமக்களையும் இணைத்து ஊருணி பாதுகாப்புக் குழு அமைக்குமாறும் மாநகராட்சி ஆணையார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT