தமிழகம்

பின்னலாடை தயாரிப்பில் மோசடி: திருப்பூர் தொழில்துறைக்கு கடும் பாதிப்பு

பெ.ஸ்ரீனிவாசன்

பின்னலாடை உற்பத்தியில் சர்வதேச சந்தையில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றுள்ளது திருப்பூர் நகரம். தற்போது கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீளும் முயற்சியாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரத் தொடங்கியுள்ள ஆர்டர்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. பின்னலாடை உற்பத்தியில் பிரின்டிங் என்பது முக்கியமான அம்சம். இந்த சூழலில் ஆர்டர்களை அளிப்போர் கேட்கும் தரத்திலான பிரின்டிங்வேலையை, அதற்குரிய தரச்சான்றுபெறாத நிறுவனங்களில் குறைந்த விலை, தரத்தில் செய்து சில ஏற்றுமதியாளர்கள் மோசடியில் ஈடுபடும் நிகழ்வுகள்நடைபெற்று வருவதாகவும், இது சர்வதேச அளவில் திருப்பூர் தொழில் துறையின் நன்மதிப்பை கெடுக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சட்ட நடவடிக்கை

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை பிரின்டிங் கூட்டமைப்பு (டெக்பா) தலைவர் டி.ஆர்.ஸ்ரீகாந்த், ‘இந்துதமிழ்' செய்தியாளரிடம் கூறியதாவது:

எங்கள் சங்கத்தின் கீழ் 350 பிரின்டிங் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில், பல நிறுவனங்கள் சர்வதேச பையர்கள் (ஆர்டர் அளிப்போர், வர்த்தகர்கள்) எதிர்பார்ப்புக்கு ஏற்ப கட்டமைப்பு, தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தி, தொழிலாளர் நலன் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தப்படுகிறது. மேலும், சர்வதேச டெஸ்டிங் லேப்-ல் பிரின்டிங் தரத்துக்கு பல லட்ச ரூபாய் செலவு செய்து உரிமம் வாங்கியுள்ளோம். பையர்களிடமும் உரிமம் வாங்கியுள்ளோம். அதற்கேற்ப, இங்குள்ளஉற்பத்தியாளர்களிடம் ஆர்டர்களைஎடுக்கும் பையர்கள், மேற்கூறப்பட்டஉரிமம்பெற்றுள்ள நிறுவனங்களிடமே பிரின்டிங் பணியை செய்யுமாறு கூறுவார்கள்.

ஆனால், கடந்த சில நாட்களாகசில ஏற்றுமதி நிறுவனங்கள் சாதாரணமுறையில் பிரின்டிங் செய்துவிட்டு, தரச்சான்று மற்றும் அதற்கான உரிமம் பெற்றவர்களிடம் பிரின்டிங் செய்ததுபோல, போலி ஆவணங்களை இணைத்து பையர்களிடம் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இது, உரிமம் பெற்ற பையர்களிடமிருந்து ஆர்டர்கள் வருவதை கேள்விக்குள்ளாக்குவதுடன், நம்பகத்தன்மையையும் இழக்கச் செய்கிறது. சிலர் செய்யும் இந்த தவறு, சர்வதேச சந்தையில் திருப்பூர் தொழில்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதுடன், ஒட்டுமொத்த தொழிலையும் பாதிக்க செய்கிறது.

எந்தவொரு ஏற்றுமதி நிறுவனமாக இருந்தாலும், பையர்கள் எந்த தரக்கட்டுப்பாட்டு சான்றிதழ் பெற்ற பிரின்டிங் நிறுவனங்களில் பிரின்டிங் செய்ய பரிந்துரை செய்கிறார்களோ, அந்த நிறுவனங்களில் பிரின்டிங் செய்ய திருப்பூர் தொழில் துறை சார்ந்த சங்கத்தினர் அறிவுறுத்த வேண்டும். இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், சட்ட ரீதியாக தீர்வு காணவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

பேச்சுவார்த்தையில் தீர்வு

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க (டீ) தலைவர் ராஜா எம்.சண்முகத்திடம் கேட்டபோது, "இந்த தவறில் ஒரு சிலர் ஈடுபடவாய்ப்புள்ளது. இது பிரின்டிங் துறையோடு ஏற்றுமதியாளர்களையும் பாதிக்கக்கூடியது. எனவே, இச்செயலில் ஈடுபடுவோரிடம் பிரின்டிங் துறையினர் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமாக தீர்வு காண முடியும்" என்றார்.

தரச்சான்று பெற உதவ வேண்டும்

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க (டீமா) தலைவர் எம்.பி.முத்துரத்தினம் கூறும்போது, "பிரின்டிங் துறையினரின் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறோம். அதே நேரம், திருப்பூரில் அனைத்து பிரின்டிங் நிறுவனங்களும் இதுபோன்ற தரச்சான்று பெற, திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை பிரின்டிங் கூட்டமைப்பு உதவ வேண்டும். இது, திருப்பூரின் ஏற்றுமதிக்கு மேலும் வலு சேர்க்கும்" என்றார்.

SCROLL FOR NEXT