பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் எழுதிய, ‘சுக்கா...மிளகா...சமூகநீதி?’ என்ற நூல் வெளியீட்டு விழா இணைய வழியில் நேற்று நடைபெற்றது.
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடலூரிலிருந்து பாமக முன்னாள் தலைவரும், அரசியல் ஆலோசனைக் குழுத் தலைவருமான பேராசிரியர் தீரன் இந்த நூலை வெளியிட்டார்.
இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் பங்கேற்ற தட்டானோடை செல்வராஜ் இந்நூலை பெற்றுக்கொண்டார். இந்நூல் வெளியீட்டுவிழாவில் சென்னையிலிருந்துபா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி சிறப்புரையாற்றினார். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர்பு.தா.அருள்மொழி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் ராமதாஸ் பேசியது: மத்திய அரசின் வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வியில் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் 27% இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்துபரிந்துரைப்பதற்காக நீதிபதி ரோகிணி ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தின் அறிக்கை உடனடியாக வெளியிடப்பட வேண்டும்.
பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்காக பெரும் தடையாக உள்ள ‘கிரிமிலேயர்’ முறை நீக்கப்பட வேண்டும். அனைவருக்கும் முழுமையான சமூகநீதி கிடைக்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் தனியார் துறைவேலைவாய்ப்பில் 80% தமிழர்களுக்கு வழங்க வகை செய்யப்படவேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களில் சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விநிறுவனங்களில் தமிழ்ப்பிள்ளைகளுக்கு மட்டும் தான் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பினருக்கும் அனைத்திலும் சமவாய்ப்பு கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். அதற்காக சமவாய்ப்பு ஆணையம் (Equal Opportunity Commission) என்ற அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றார்.