மத்திய அரசின் 'ஜல் ஜீவன்’ இயக்க திட்டத்தில், திருக்கழுக்குன்றம் ஒன்றியம் அழகு சமுத்திரம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள திறந்தவெளிக் கிணறு. 
தமிழகம்

செங்கை மாவட்ட கிராமங்களில் உள்ள 3.19 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு: மத்திய அரசின் ‘ஜல் ஜீவன்' திட்டத்தில் இலக்கு

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு மாவட்ட கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு ‘ஜல்ஜீவன்’ திட்டத்தில் 3.19 லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ‘ஜல் ஜீவன்’ இயக்கத் திட்டம் மூலம் கிராமப்புற மக்களுக்கு தினமும் தலா 55 லிட்டர் தண்ணீர் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீதம் 2024-ம் ஆண்டுக்குள் குழாய் மூலம் குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 54,267 வீடுகளுக்கு மட்டும் இதுவரை குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்து 2,23,674வீடுகளுக்கு குடிநீர் இணைப்புவழங்க மத்திய அரசின் ‘ஜல் ஜீவன்’ இயக்கதிட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில், 87,303 வீடுகளுக்கும், அடுத்தடுத்த ஆண்டுகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், 85 மேல்நிலை குடிநீர்த்தேக்கத் தொட்டிகளும், 153 ஆழ்துளை மற்றும் 15 திறந்தவெளிக் கிணறுகளும் அமைக்கப்பட உள்ளன.

இதுதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார் கூறியதாவது: ‘ஜல் ஜீவன்’ இயக்க திட்டத்தில் 5 ஆண்டுகளில் 3.19 லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. அதற்கான கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த ரூ.71.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

எஞ்சிய ஊராட்சிகளில் ‘ஜல் ஜீவன்’ இயக்கம் திட்டத்தின் மூலம் கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT