வேலந்தாவளம் எல்லையில்... 
தமிழகம்

தமிழக - கேரள எல்லையில் குறையும் தொற்றுப் பரிசோதனைகள்: கரோனா பரவல் அதிகரிக்கும் என மக்கள் அச்சம்

கா.சு.வேலாயுதன்

தமிழக - கேரள எல்லைப் பகுதிகளில் நடத்தப்பட்டு வந்த மருத்துவப் பரிசோதனைகள், ஓணம் பண்டிகைக்குப் பிறகு குறைந்துள்ளன. விடுமுறையில் சொந்த ஊருக்குச் சென்றிருக்கும் கேரள சுகாதாரத் துறையினர் இன்னமும் பணிக்குத் திரும்பாததால், எல்லைப் பகுதிகளில் காவல்துறையினரின் வழக்கமான சோதனைகள் மட்டும் நடத்தப்படுகின்றன. இதனால், தொற்று மேலும் அதிகரிக்குமோ எனும் கவலை எல்லைப் பகுதி மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது.

நாட்டிலேயே முதன்முதலாகக் கரோனா தொற்று கேரளத்தில்தான் கண்டறியப்பட்டது. தொற்றுப் பரவல் அதிகரித்த நிலையில் ஒவ்வொரு மாநில எல்லையும் மூடப்பட்டது. இ-பாஸ் பெற்றுத்தான் மாநில எல்லைகளைக் கடக்க முடியும் எனும் சூழல் உருவானது.

சோதனைச் சாவடிகளில் இரு மாநிலங்களையும் சேர்ந்த காவல்துறை, சுகாதாரத் துறை, வருவாய்த் துறை எனப் பல்வேறு துறை அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டனர். இ-பாஸ் இல்லாது வந்தவர்கள் அந்தந்த மாநிலங்களுக்கே திருப்பி அனுப்பப்பட்டனர். இ-பாஸ் பெற்று வந்தாலும் அவர்களுக்குக் காய்ச்சல், சளி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர். இதனால் எல்லையின் இருபுறங்களிலும் வசிக்கும் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். தொழில் நிமித்தம் எல்லை தாண்டிச் செல்ல வேண்டி இருப்பதால், இதற்குத் தீர்வு வேண்டி எல்லைப் பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களிலும் இறங்கினர்.

இதற்கிடையே ஒவ்வொரு மாதமும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தளர்வுகளை அறிவித்தன. அதன் மூலம் அண்டை மாநிலங்களில் பணியிடமும் வசிப்பிடமும் இருப்பவர்கள் மாதாந்திர இ-பாஸ் பெற்று தங்கள் அன்றாட வேலைகளைக் கவனிக்கலாம் என்றும் சொல்லப்பட்டது. அப்படி வருபவர்களைச் சோதனைச் சாவடிகளில் முகாமிட்டிருந்த சுகாதாரத் துறையினர், காய்ச்சல், சளி மாதிரிப் பரிசோதனைகள் செய்தே உள்ளே அனுமதித்தனர்.

இதற்கிடையே செப்டம்பர் முதல், மாநிலங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் தேவையில்லை என்றும், அந்தந்த சூழலுக்கேற்ப மாநில அரசுகளே முடிவு செய்துகொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்தது. கேரளத்திலும், தமிழகத்திலும் கரோனா தொற்று படுவேகமாகப் பரவிக்கொண்டிருக்க, எல்லையோரங்களில் பெரிய அளவில் தளர்வுகளை அறிவிக்க இரு மாநில அரசுகளுமே தயக்கம் காட்டி வந்தன. கர்நாடக, ஆந்திர எல்லைகளில் இல்லாத கெடுபிடி கேரள - தமிழக எல்லைகளில் இருப்பதற்கு மக்களிடையே எதிர்ப்பும் இருந்துவந்தது.

ஆனால், கடந்த சில வாரங்களாக நிலைமை வெகுவாக மாறியிருக்கிறது. தமிழகப் பகுதியில் இருக்கும் சோதனைச் சாவடிகளில் நான்கைந்து போலீஸார் மட்டுமே பணியில் இருக்கிறார்கள். சுகாதாரத் துறையைப் பொறுத்தவரை இரண்டு அல்லது மூன்று பேரே பணியில் இருக்கிறார்கள். அதேசமயம், தமிழகப் பகுதியில் இருக்கும் அளவுகூட கேரளப் பகுதியில் சோதனைகள் இல்லை என்பதுதான் கவனிக்கத்தக்க விஷயம். குறிப்பாக, கேரள சோதனைச் சாவடிகளில் மருத்துவப் பரிசோதனைகளே நடத்தப்படுவதில்லை.

நடுப்புணி, மீனாட்சிபுரம், கோவிந்தாபுரம், வேலந்தாவளம் என கேரள எல்லைப் பகுதியில் இருக்கும் சோதனைச் சாவடிகளில் தற்போது ஒரு சுகாதாரப் பணியாளர்கூட இல்லை. ஷிஃப்ட்டுக்கு 2 காவலர்கள் மட்டுமே பணியில் இருக்கிறார்கள். முன்பைப் போல அதிகமான கெடுபிடிகளும் இல்லை. உரிய ஆவணம், செல்போன் மெசேஜைக் காட்டினாலே கேரளத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

இதுகுறித்து வேலந்தாவளம் சாவடியில் பணியில் இருந்த காவலர் செய்யது அகமதுவிடம் பேசினேன். “ஓணம் விடுமுறைக்குச் சொந்த ஊர்களுக்குச் சென்ற சுகாதாரத் துறையினர் எப்போது திரும்பி வருவார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் வந்த பின்னர்தான் சோதனைச் சாவடிகளைக் கடந்து செல்பவர்களுக்குச் சளி, காய்ச்சல் பரிசோதனைகள் நடத்தப்படும். அதுவரை காவல்துறையினரின் வழக்கமான சோதனைகள்தான் நடத்தப்படும்” என்று செய்யது அகமது கூறினார்.

இதனால், எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டிருக்கிறது. “தொற்று எண்ணிக்கை குறைவாக இருந்த சமயத்தில் எல்லைப் பகுதிகளில் அதிகக் கெடுபிடி காட்டப்பட்டது. தற்போது நாளுக்கு நாள் தொற்று அதிகரிக்கும் சூழலில், மருத்துவப் பரிசோதனைகளே இல்லாத நிலை ஏற்பட்டிருப்பது ஆபத்தானது” என்று எல்லைப் பகுதி மக்கள் கவலையுடன் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT