பிரதிநிதித்துவப் படம். 
தமிழகம்

கிசான் சம்மன் திட்ட முறைகேடு: வேலூர் மாவட்டத்தில் தனியார் கணினி மைய உரிமையாளர் கைது; சிபிசிஐடி போலீஸார் நடவடிக்கை

வ.செந்தில்குமார்

வேலூர் மாவட்டத்தில் பிரதமரின் கிசான் சம்மன் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட புகாரின்பேரில் தனியார் கணினி மைய உரிமையாளரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டத்தில் பிரதமரின் கிசான் சம்மன் திட்டத்தில் தகுதியில்லாதவர்கள் இணைக்கப்பட்டு நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் மட்டும் உள்ளூரைச் சேர்ந்த 3,200-க்கும் மேற்பட்டோரும், வெளி மாநிலங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்டோர் மூலம் ரூ.1.23 கோடி பணம் முறைகேடு செய்திருப்பது தெரியவந்துள்ளது.

ரூ.70 லட்சம் பணம் மீட்பு

வேலூர் மாவட்டத்தில் தகுதியில்லாத விவசாயிகள் பெற்ற பணத்தை மீட்க 7 வட்டாரங்களில் துணை ஆட்சியர்கள் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள வேளாண், வருவாய்த் துறை அதிகாரிகள் நேரடியாகச் சென்று முறைகேடாகப் பெற்ற நபர்களிடம், பணத்தை அவர்களின் வங்கிக் கணக்கின் வழியாகவே செலுத்த வைத்து திரும்பப் பெற்று வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் இதுவரை ரூ.70 லட்சம் அளவுக்கு பணத்தைத் திரும்பப் பெற்றுள்ளதாக வேளாண் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் கைது

கிசான் சம்மன் திட்டத்தில் முறைகேடு செய்த புகாரின்பேரில் சந்தோஷ் (30) என்பவரை சிபிசிஐடி போலீஸார் இன்று (செப். 17) கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இவரது மாமனார் ஊர் வேலூர் மாவட்டம் திருவலம். அங்கு தனியார் கணினி மையத்தை நடத்தி வரும் சந்தோஷ், விவசாயிகளின் பெயரில் போலியான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து முறைகேடு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT