அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்: கோப்புப்படம் 
தமிழகம்

கரோனா தொற்று; மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் சிகிச்சையை குடும்பத்தினருக்குத் தெரிவிக்கும் வசதி: புதுச்சேரியில் ஓரிரு நாட்களில் அறிமுகம்

செ.ஞானபிரகாஷ்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் நல விவரங்கள், சிகிச்சை நிலை தொடர்பாக குடும்பத்தினருக்குத் தொலைபேசி வாயிலாகத் தெரிவிக்க ஒருங்கிணைந்த தகவல் முறை ஓரிரு நாட்களில் புதுச்சேரியில் அறிமுகமாகவுள்ளது என்று புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.

புதுச்சேரியில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், வளர்ச்சி ஆணையர் அன்பரசு, சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் ஆகியோர் இன்று (செப். 17) கலந்தாலோசித்தனர்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியதாவது:

"புதுச்சேரியில் கரோனா தொற்று காரணமாக, இறந்தவர்களின் தகவல்களைப் பெற்று ஆலோசனை செய்தோம். சுகாதாரப் பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று பரிசோதனைக்காக அழைக்கின்றனர். ஆனால், சிலர் ஒத்துழைப்பு அளிக்காமல் இருந்து கடைசி நேரத்தில் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு வருவது நோயாளிகள் உயிரிழப்பதற்கு முக்கியக் காரணமாக உள்ளது. இறந்தவர்களில் நிறையப் பேர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள். குறிப்பாக, இறந்தோரில் 51 சதவீதப் பேருக்கு நீரிழிவுடன் உயர் ரத்த அழுத்தமும் இருந்தது.

கிராமப்புற செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள் வீடு, வீடாக வரும்போது, அவர்களிடம் காய்ச்சல் உள்ளதா? சளி உள்ளதா? என்று பொதுமக்கள் சொல்லவில்லை என்றால், அவர்களைக் காப்பாற்ற முடியாது.

புதுச்சேரியிலுள்ள மருத்துவமனைகளில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் விவரங்களை அவர்களின் குடும்பத்தினருக்குத் தினம் தெரிவிக்கும் வசதி ஓரிரு நாட்களில் அறிமுகமாகும். அத்துடன் தொடர்புக்குத் தொலைபேசி எண் வெளியிடப்பட்டு, அதில் சிகிச்சை பெறுவோரின் விவரங்களைக் குடும்பத்தினரும் அறியும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காகத் தனி தகவல் தொடர்பு சேவை செயல்பட உள்ளது.

தற்போது, மருத்துவமனைகளில் மொத்தமாக 803 படுக்கைகள் காலியாக உள்ளன. அத்துடன் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 378 படுக்கைகள் காலியாக உள்ளன.

உமிழ்நீர் பரிசோதனையை அதிகரித்துள்ளோம். கடந்த ஐந்து நாட்களில் 23 ஆயிரத்து 858 பேருக்குப் பரிசோதனைகள் செய்துள்ளோம்.

தற்காலிகமாக மருத்துவர்களை நியமிக்க முடிவு எடுத்து நடவடிக்கை எடுத்தாலும், போதிய அளவு மருத்துவர்கள் சேரவில்லை. அதனால் ஊதியத்தை உயர்த்தித் தர ஆலோசிக்கிறோம்.

புதுச்சேரியைப் பொறுத்தவரை கரோனா பரிசோதனை, பாதிப்பு, இறப்பு விவரங்கள் முழுவதையும் சரியாகவே தருகிறோம். மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் புதுவையில் கண்டிப்பாக தொற்றைக் கட்டுப்படுத்த முடியும்".

இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT