தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே மேலும் ஒரு பழங்கால சதிக்கல்லை வரலாற்று ஆசிரியர் கண்டுபிடித்துள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி வரலாற்று ஆசிரியரும், பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி முனைவர்பட்ட தொல்லியல் ஆய்வு மாணவருமான ஆசிரியர் மாணிக்கம் இந்திய தொல்லியல் துறை ஆய்வாளர்கள் பிரசன்னா யத்தீஸ்குமார் மற்றும் கல்வெட்டாய்வாளர் வீரமணிகண்டன் ஆகியோர் வழிகாட்டுதல் படி பல்வேறு தொல்லியல் ஆதாரங்களை கண்டுபிடித்து வருகிறார்.
கடந்த மாதம் ஸ்ரீவைகுண்டம் அணை அருகே குருசுகோயில் வழியாக செல்லும் வாய்க்கால் படித்துறையில் 16 முதல் 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சதிக்கல்லை கண்டுபிடித்தார்.
தற்போது ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து பேட் துரைசாமிபுரம் செல்லும் சாலையில் ஒளிமுத்துசாமி கோயில் அருகே மேலும் ஒரு சதிக்கல்லைக் அவர் கண்டுபிடித்துள்ளார். அதில் கணவன் மற்றும் மனைவி என இரு சிலைகள் புடைப்பு சிற்பமாக உள்ளன.
இந்த சதிக்கல் குறித்து வரலாற்று ஆசிரியர் சிவகளை மாணிக்கம் கூறியதாவது: பழங்காலத்தில் இந்த சதிக்கல்லுக்கு மடாலயம் கட்டி வழிபட்டுள்ளனர். 2 மீட்டர் நீளமும், 2 மீட்டர் அகலமும், 3 மீட்டர் உயரமும் கொண்ட இந்த மடாலயத்தின் வாசல் பகுதியில் இருபுறங்களிலும் மூன்று ஜோடி விளக்கு மாடங்கள் 20 செ.மீ. உயர இடைவெளிகளில் உள்ளன.
இந்த சதிக்கல்லானது 58 செ.மீ., நீளமும், 47 செ.மீ., உயரமும், 12.செ.மீ., அகலமும் கொண்டது. இதில் ஒரே கல்லில் செய்யப்பட்ட இரண்டு புடைப்பு சிற்பங்கள் உள்ளன. அதில் ஆண் சிற்பம் 60 செ.மீ., உயரமும், 40 செ.மீ., அகலமும், பெண் சிற்பம் 60 செ.மீ., உயரமும், 40 செ.மீ., அகலமும் கொண்டாக உள்ளன. இரு சிற்பங்களும் கால்களை மடக்கி அமர்ந்த நிலையில் உள்ளன.
கணவன் இறந்ததால் அவருடைய மனைவி, கணவனின் உடல் எறியும் சதி தீயினுள் பாய்ந்து உயிர் துறந்த பெண்களின் கற்பை போற்றும் விதமாக இந்த சதிக்கல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சதிக்கல்லை தீப்பாய்ந்த அம்மனாக ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த மாதிரி சதிக்கல்கள் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அதிகளவில் உள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் தீ பாய்ந்து இறந்த பெண்கள் மாலையம்மன், தீப்பாச்சியம்மன், தீப்பொறிஞ்சம்மன், மங்கம்மாள், உலகம்மன், ஆனந்தாயி அம்மன், அழகம்மை, புலிகுத்தியம்மன், ரெங்க மன்னர் தீப்பாய்ச்சியம்மன் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன.
இதனைக் குலதெய்வமாக வழிபடும் நிலையும் காணப்படுகிறது. இவைகள் 16, 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவைகளாக இருக்கலாம் என்றார் அவர். இந்த ஆய்வின் போது பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசிவன், வரலாற்று ஆசிரியர் முத்தையா ஆகியோர் உடனிருந்தனர்.