கே.என்.நேரு: கோப்புப்படம் 
தமிழகம்

கடவுளுக்கு இணையாக முதல்வரைச் சித்தரித்தாலும் மக்கள் எந்த அளவுக்கு ஏற்பார்கள் என்று தேர்தலில்தான் தெரியும்; கே.என்.நேரு

ஜெ.ஞானசேகர்

கடவுளுக்கு இணையாக முதல்வரைச் சித்தரித்தாலும், மக்கள் எந்த அளவுக்கு ஏற்பார்கள் என்று தேர்தலில்தான் தெரியும் என, திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

பெரியார் பிறந்த நாளையொட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள பெரியார் சிலைக்கு, கே.என்.நேரு தலைமையில் லால்குடி எம்எல்ஏ சவுந்தரபாண்டியன், வடக்கு மாவட்டச் செயலாளர் தியாகராஜன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி உட்பட திரளான திமுகவினர் இன்று (செப். 17) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பெரியார் சிலைக்கு கே.என்.நேரு உள்ளிட்டோர் மரியாதை

அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் கே.என்.நேரு கூறியதாவது:

"தமிழ்நாட்டு மக்கள் பெரியாரை என்றும் நினைவில் கொள்ள வேண்டும். அவரால்தான் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வாழ்வு கிடைத்தது என்பதை மனதில் நிறுத்தி, அவரது கொள்கை வழி நடக்க வேண்டும்.

பெரியாரின் கொள்கையை அல்லது மக்களுக்குத் தேவையான கொள்கையை எவர் கூறினாலும் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் தங்களுக்கு எதிராகப் பேசியதாகக் கருதி மிரட்டுகின்றனர். ஆனால், பெரியாரின் கொள்கை எவ்வளவு முக்கியம் என்று தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவர். பெரியாரின் கொள்கை வழிதான் வெற்றி பெறும்.

சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு துணை முதல்வர் பதவி வேண்டுமென தாங்கள் கேட்கவில்லை என்று அந்தக் கட்சியின் தமிழகத் தலைவர் கே.எஸ்.அழகிரியே கூறிவிட்டார்.

சட்டப்பேரவையில் முதல்வர் பேசியது மட்டுமே ஊடகங்களில் வெளிவந்தது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் பேசியது வெளியே வரவில்லை. அந்த அளவுக்கு அவர்களிடம் அதிகாரம் உள்ளது. ஆனால், நாங்கள் மக்களிடம் கொண்டு செல்வோம்.

ஜல்லிக்கட்டுக்கு விலக்கு வாங்கியதுபோல், நீட் தேர்விலிருந்தும் விலக்களிக்க சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றி மத்திய அரசை அணுகிப் பெறுவோம்.

ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களுக்கு திமுக ஆட்சியில் ஆய்வு செய்ய மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. திட்டத்தையே செயல்படுத்த அனுமதி அளிக்கவில்லை. அதேவேளையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஜெயலலிதா ஆட்சியில்தான் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை.

கடவுளுக்கு இணையாக முதல்வரைச் சித்தரித்தாலும், மக்கள் எந்த அளவுக்கு ஏற்பார்கள் என்று தேர்தலில்தான் தெரியும்.

கிசான் திட்டத்தில் முறைகேடு செய்தவர்களிடம் இருந்து பணத்தை மீட்டு, உண்மையான விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும் என்றுதான் திமுக வலியுறுத்துகிறது".

இவ்வாறு கே.என்.நேரு தெரிவித்தார்.

SCROLL FOR NEXT