கரோனா பெருந்தொற்றின் காரணமாக கடன் பெற்றோருக்கு வங்கிக் கடன் கட்டுவதில் இருந்து ஆறு மாதத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் இந்த சலுகையை வங்கிக் கடன் எடுத்திருந்த பலரும் பயன்படுத்தியிருந்த நிலையி,ல் ஒத்திவைக்கப்பட்ட தவணைக் காலத்துக்கும் வட்டி போடப்பட்டு அசலோடு சேர்க்கப்பட்டது. இதற்கு எதிரான வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் ஓசையின்றி வங்கிகள் வட்டிக்கு, வட்டி போட்டு வசூல் செய்யத் தொடங்கியிருக்கின்றன.
கரோனா தொற்றின் காரணமாகச் சாமானிய மக்களின் பொருளாதாரம் அகல பாதாளத்திற்குச் சென்றது. தனிநபர், வீட்டுக்கடன், வாகனக் கடன் எடுத்திருந்த பலரும் இதனால் நிலைகுலைந்தனர். கரோனாவினால் பலரும் வேலை இழக்கும் சூழலும் ஏற்பட்டது. பல தொழிலாளர்கள் ஊதிய வெட்டுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இப்படியான சூழலில் இந்திய ரிசர்வ் வங்கி, வாடிக்கையாளர்களுக்குச் சில சலுகைகளைக் கொடுத்தது. அதன்படி வங்கிகளில் மூன்று மாதங்களுக்கு தவணை முறை ஒத்திவைக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டது. ஆனால் இயல்புநிலை திரும்பாததால் இந்த சலுகை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டது.
இந்நிலையில் ஆறு மாதங்களுக்கு வங்கிக்கடன் தவணையை ஒத்தி வைத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு ஒத்திவைப்பு காலத்திற்கான வட்டிக் கடன் அசல் தொகையில் சேர்க்கப்பட்டு அதற்கும் சேர்த்தே வட்டி வசூலிக்கும் திட்டம் குறித்துத் தகவல் வெளியானது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 28-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இதே வழக்கில் ஒத்திவைப்பு கால வட்டிக்கு வட்டி வசூலிப்பது தொடர்பாக முடிவெடுக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் இரண்டு வார கால அவகாசமும் கொடுத்துள்ளது. இப்படி வாத, பிரதிவாதங்களுக்கு மத்தியில் இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையிலேயே தனியார் வங்கிகள் வங்கிக்கடன் ஒத்திவைப்பு காலத்துக்கான வட்டிக்கும், வட்டி போட்டு வசூலிக்கத் தொடங்கியுள்ளன.
முன்னணி தனியார் வங்கியான எச்.டி.எப்.சி வாடிக்கையாளர்களின் கடன் மூலதனத்தில் இந்த வட்டியோடு சேர்த்து அசலில் ஏற்றியுள்ளது. மேலும் தவணைக்காலம் ஒத்தி வைக்கப்பட்ட மாதங்களுக்குப் பதிலாக வங்கிக்கடன் திருப்பிச் செலுத்தும் காலத்தையும் ஒரு ஆண்டு காலத்துக்கு கூட்டவும் செய்துள்ளது. வங்கித் தரப்பு இதை முறைப்படி வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்காததால் கடன்தாரர்கள் பலருக்கும் இது தெரியவில்லை.
எச்.டி.எப்.சி சார்பில் கூகுள் ப்ளே ஸ்டோரியில் பிரத்யேகமாக LOAN ASSIST என்கிற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை நாம் வங்கியில் கொடுத்திருக்கும் எண் கொண்ட மொபைலில் இருந்து இயக்கினால் நாம் வங்கியில் வாங்கியிருக்கும் கடன்கள் குறித்த தகவல்கள் வந்து விழுகின்றன. இதில் கரோனாவுக்குப் பின் அசல் தொகையில் வட்டியையும் சேர்த்துக் கூட்டியிருப்பதைத் தெளிவாகக் காட்டியிருக்கிறது வங்கி நிர்வாகம். கூடவே திருப்பிச் செலுத்தவேண்டிய தவணைக் காலத்தையும் ஓராண்டு வரை கூட்டியுள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் தன்னிச்சையாக, ஒத்திவைப்பு காலத்துக்கு வங்கிகள் வட்டி போட்டு அசலோடு சேர்த்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது.