தமிழகம்

ஆன்லைனில் இறுதிப் பருவத் தேர்வு: இணைய வேகம், டவுன்லோட், ஸ்கேன்; சந்தேகங்களும் விளக்கங்களும்

க.சே.ரமணி பிரபா தேவி

கல்லூரிகள் வரலாற்றிலேயே முதல் முறையாக கரோனா தொற்றால், செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் இணைய வழியில் நடைபெற உள்ளன. இதில் கணிப்பொறியே கண்காளிப்பாளராகவும் வீடுகளே தேர்வு மையங்களாகவும் செயல்பட உள்ளன.

கேள்வித்தாளை இணையத்திலேயே மாணவர்களுக்கு அனுப்பி வைத்தல், வினாத்தாள் வெளியே கசிந்துவிடாமல் பாதுகாத்தல், இணையவழித் தேர்வுக்கான முன்னேற்பாடுகளைச் செய்தல் ஆகியவற்றில் அனைத்துப் பல்கலைக்கழகங்களும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்வுக்கால அட்டவணைகள் மற்றும் தேர்வுக்கான விதிமுறைகளைப் பல்வேறு பல்கலைக்கழகங்கள் வெளியிட்டுள்ளன.

மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்

* மாணவர்களின் வாட்ஸ் அப் எண் மற்றும் இ-மெயில் முகவரிக்குக் கேள்வித்தாள் அனுப்பப்படும். அல்லது ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக இணைப்பில் இருந்து கேள்விகளைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

* கேள்விகளைப் பார்த்து, பதிலை ஏ4 தாளில் மட்டுமே எழுதவேண்டும். தாளின் ஒரு பக்கத்தில் மட்டுமே விடைகளை எழுத வேண்டும்.

* விடைத்தாளின் மேல் பக்கத்தில் மாணவர்களின் பதிவு எண், பக்க எண், பாடப்பிரிவு உள்ளிட்டவற்றைக் கட்டாயம் ஒவ்வொரு பக்கத்திலும் குறிப்பிட வேண்டும்.

* விடைகள் டைப் செய்யப்பட்டிருக்கக் கூடாது. மாணவர்களின் முந்தைய கையெழுத்தில் இருந்து வேறுபட்ட கையெழுத்தாக இருக்கவும் கூடாது.

* விடைத்தாள் 18 பக்கங்களுக்குள் இருக்க வேண்டியது அவசியம்.

* எழுதி முடித்த பின், விடைத்தாளை ஸ்கேன் செய்து ஒரு மணி நேரத்துக்குள் பல்கலைக்கழக இணைப்பில் உள்ள முகவரியில் பதிவேற்றம் செய்ய வேண்டியது அவசியம்.

* அதற்கான வசதி இல்லாமல், இணையத்தில் பதிவேற்ற முடியாதவர்கள் விரைவுத் தபால் மூலம் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பலாம்.

* அருகிலேயே கல்லூரி இருந்தால் நேரில் சென்று விடைத்தாளை அளிக்கலாம்.

* அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவர்கள் தேர்வெழுதுவதற்கு முன் சில அடிப்படை அம்சங்களைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டியது அவசியம். தேவைப்பட்டால் சில செயலிகளையும் முன்னதாகவே பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

இணையத்தின் வேகம்

கேள்விகளைப் பதிவிறக்கம் செய்வது, விடைத்தாளை ஸ்கேன் செய்வது, பிடிஎஃப்ஃபாக மாற்றுவது ஆகியவற்றுக்கு இணையம் அத்தியாவசியம்.

ஏசிடி, பிஎஸ்என்எல் உள்ளிட்ட பிராட்பேண்ட் வசதி இருந்தால் இணைய வேகம் அதிகமாக இருக்கும். போன் இணையம் என்றால் முன்கூட்டியே இணையத்தின் வேகத்தைச் சோதிக்க வேண்டியது அவசியம்.

சராசரியான வேகத்துக்கு டவுன்லோட் மற்றும் அப்லோட் வேகம் இரண்டும் குறைந்தபட்சம் தலா 2 எம்பிபிஎஸ் (Mbps) இருக்க வேண்டும். 5 எம்பிபிஎஸ் இருந்தால் அதிவேகமாக இருக்கும். அதேநேரத்தில் ஒரு இணைய இணைப்பை ஒருவர் மட்டும் பயன்படுத்தினால் வேகம் அதிகமாக இருக்கும்.

இணையத்தின் வேகத்தை அறிந்துகொள்ள

கேள்வித்தாள் பதிவிறக்கம்

கல்லூரிகள் அனுப்பும் கேள்வித்தாள் ஸிப் (ZIP) ஆக இருந்தால் அதை ரைட் க்ளிக் செய்து எக்ஸ்ட்ரேக்ட் செய்து பயன்படுத்த வேண்டும். டவுன்லோட் செய்தால் எங்கே சேமிக்கப்படவேண்டும் என்பதை முன்கூட்டியே போன்/ கணினிக்குச் சொல்ல வேண்டியது அவசியம். வழக்கமாக Downloads பகுதியில் சேமிக்கப்படும் கோப்பை, தேவைப்பட்டால் Desktop பகுதியில் சேமித்து, எளிதாகப் பயன்படுத்தலாம்.

ஸ்கேன் செய்வது எப்படி?

விடைகளை எழுதி முடித்ததும் விடைத்தாளை ஸ்கேன் செய்து கல்லூரிக்கு அனுப்ப வேண்டும். தரமான பக்கங்களுக்கு எச்.பி., டெல் ஸ்கேனர் இயந்திரத்தை சொந்தமாக வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மொபைலிலேயே ஸ்கேன் செய்ய நினைப்பவர்கள் ஆண்ட்ராய்ட் போனில் உள்ள scanner செயலியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதில் image, document என இரண்டு தெரிவுகள் இருக்கும். அதில் document என்பதைத் தேர்ந்தெடுத்து மொத்தமாக ஸ்கேன் செய்துகொள்ள வேண்டும்.

அல்லது Adobe Reader, WPS செயலிகளைப் பயன்படுத்தலாம்.

Google Drive செயலியில் உள்ள scan வசதியைப் பயன்படுத்தலாம்.

Microsoft office lens செயலியையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பிடிஎஃப் ஆக மாற்றுவது எப்படி?

ஸ்கேன் செய்து சேமிக்கும்போதே pdf தெரிவைத் தேர்ந்தெடுக்கலாம். ஒவ்வொரு படமாக ஸ்கேன் செய்திருந்தால், அனைத்தையும் Word அல்லது New Folder-ல் ஒவ்வொன்றாகச் சேமித்து Print ஆப்ஷன் கொடுத்து pdf தெரிவைத் தேர்ந்தெடுக்கலாம்.

தேவைப்பட்டால் JPEG டூ PDF செயலியான smallpdf மூலம் பிடிஎஃப் ஆக மாற்றிக்கொள்ளலாம்.

**

அதைத் தொடர்ந்து கல்லூரி குறிப்பிட்டிருக்கும் இணைப்பில் விடைகளை அனுப்பி வைத்துவிட்டு, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் தெரிவிக்க வேண்டியது அவசியம்.

SCROLL FOR NEXT