பிரதமர் அறிவித்த ரூ.15 லட்சம் பணம் வந்திருப்பதாகக் கூறி வங்கி கணக்குகளில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி போலீஸார் எச்சரித்துள்ளனர்.
சமீப காலமாக, “வங்கியில் இருந்து பேசுகிறேன். சுவிஸ் வங்கிகளில் இருந்து மீட்கப்பட்ட பணத்தை பொதுமக்களுக்கு பிரித்து கொடுக்கும் பணி நடந்து வருகிறது. பிரதமர் அறிவித்தபடி ஒவ்வொரு நபருக்கும் ரூ.15 லட்சம் கொடுக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக ரூ.25 ஆயிரம் உங்கள் வங்கி கணக்குக்கு அனுப்பப்படும். அதற்காக உங்கள் வங்கி கணக்கு விவரங்களை கூறுங்கள்” என பேசுகின்றனர்.
ஆண்கள் மட்டுமே இதுபோன்ற மோசடிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது ஏராளமான பெண்களும் இதுபோல பேசுகின்றனர்.
ஆனால், அனைவரும் ரூ.15 லட்சம் பணம் வந்திருப்பதாக ஒரே மாதிரியாக பேசுவதால், இவர்கள் அனைவரும் ஒரே கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனத் தெரிகிறது. பலர் இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பணத்தை இழந்தவர்கள் புகாராகவும் பதிவு செய்துள்ளனர். எனவே, இதுபோன்ற போலியான அழைப்புகளை நம்பி யாரும் வங்கி கணக்கு விவரங்களை தெரிவிக்க வேண்டாம் என சைபர் கிரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர்.