தமிழகம்

சென்னை அண்ணா சாலையில் அண்ணா சுரங்கப்பாதை புதுப்பொலிவுடன் திறப்பு

செய்திப்பிரிவு

சென்னை அண்ணா சாலையில் உள்ள பழைய அண்ணா சுரங்கப்பாதை பல்வேறு வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சுரங்கப்பாதை சென்னையின் மிகப் பெரிய சுரங்கப்பாதையாகும். அண்ணா சிலைக்கு கீழே உள்ள இந்த பழமையான சுரங்கப்பாதை பல்வேறு புதிய வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அருகே மெட்ரோ ரயில் நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளதால், பயணிகள் வந்து செல்ல அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கிரானைட் தளம், சுவர் டைலிங், புதிய விளக்குகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலைய பொதுத் தளத்துக்கு சுரங்கப்பாதை இணைக்கப்பட்டுள்ளது.

இதனால், வாலாஜா சாலை, எல்லீஸ் சாலை, பிளாக்கர்ஸ் சாலை மற்றும் அண்ணா சாலை ஆகிய இடங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் மெட்ரோ ரயில் பயணிகள் இந்த சுரங்கப்பாதையைப் பயன்படுத்தி மெட்ரோ ரயில்களில் பயணிக்கலாம். சாலையை எளிதில் கடந்து செல்லலாம்.

அறிவிப்பு பலகைகள்

காதிபவன் மற்றும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஆகியவற்றையும், இந்தஅண்ணா சுரங்கப்பாதை இணைக்கிறது.

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு, பயணிகளை வழிநடத்த அண்ணா சுரங்கப்பாதையின் நுழைவு வாயில் மற்றும் நடைபாதைகளிலும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT