நீலகிரி மாவட்டம் முழுவதும் சுகாதாரமற்ற சூழலில் ‘ஊட்டி வர்க்கி’ உற்பத்தி செய்யப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அடுமனைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
‘ஊட்டி வர்க்கி’ ஆரோக்கியமற்ற பதார்த்தம் என்றும், மாட்டுக் கொழுப்பு சேர்க்கப்படுவதாகவும், சுகாதாரமற்ற முறையில் உற்பத்தி செய்யப்படுதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு உதகையில் வர்க்கி உற்பத்தி செய்யும் அடுமனைகளில், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அடுமனைகள் சுகாதாரமின்றி இருந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக ‘தி இந்து’ ‘உங்கள் குரல்’ பகுதிக்கு தொடர்பு கொண்டு குன்னூர் நுகர்வோர் பாதுகாப்புச் சங்கத் தலைவர் சு.மனோகரன் கூறியதாவது:
ஊட்டி வர்க்கியில் மாட்டுக் கொழுப்பு சேர்க்கப்படுவதாக பல ஆண்டுகளாக சர்ச்சை உள்ளது. மேலும், நீலகிரியில் உள்ள பெரும்பாலான அடுமனைகள் சுகாதாரமற்ற முறையில் செயல்படுகின்றன. இதுகுறித்து 15 ஆண்டுகளாக புகார் தெரிவித்து வருகிறோம். ஆனால், இதுவரை ஆய்வுகள் நடத்தப்படவில்லை.
வர்க்கி தயாரிப்பதற்கான மாவை காலால் மிதித்து பிசைக்கின்றனர். வர்க்கி தயாரிக்க எந்த எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது என்பது பெரிய கேள்விக்குறி. வர்க்கி மிருதுவாக இருக்க, விலங்கு கொழுப்பு கலக்கப்படுகிறது. சுகாதாரத்தை காக்க அடுமனைகளில், நவீன இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டும்.
எந்தவித சுகாதாரமும் இல்லாத அடுமனைகளில் தயாரிக்கப்படும் வர்க்கிக்கு புவிசார் குறியீடு பெற முயற்சிப்பது சாதனையாக கருதாமல், மக்களின் நலனை முதன்மையாக கருத்தில்கொண்டு, அடுமனைகளில் சுகாதாரத்தை பேண வேண்டும். எனவே, உதகையில் உள்ள அடுமனைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டதுபோல், மாவட்டம் முழுவதும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
உணவுப் பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ரவி கூறும்போது, “சுகாதாரமற்ற அடுமனைகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப் படும். ஊட்டி வர்க்கி உற்பத்தி செய்யப்படும் அடுமனைகள் சுகாதாரமற்ற சூழலில் இயங்கு வதால், மாவட்டம் முழுவதும் தொடர்ந்து ஆய்வு நடத்தப்படும். உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் பயற்சிக்குச் சென்றுள்ளனர். அவர்கள் வந்ததும் மீண்டும் ஆய்வுகள் தொடரும்” என்றார்.