புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான முதல் வேட்பு மனுவாக தேர்தல் மன்னன் பத்மராஜன் நேற்று மனுதாக்கல் செய்தார். தேர்தல்களில் இது அவரது 171 மனுவாகும்.
தேர்தலில் போட்டியிடுவதற் காக இதுவரை ரூ. 20 லட்சம் இழந் துள்ளேன். அடுத்து நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுவேன் என்று பத்ம ராஜன் தெரிவித்தார்.
புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி.க்கான தேர்தல் வருகிற 28-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வேட்புமனு தாக்கல் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் சேலம் மேட்டூரைச் சேர்ந்த பத்மராஜன் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள தேர்தல் அதிகாரி மோகன்தாஸ் அலுவலகத்துக்கு வந்தார்.
அவரிடம் வேட்புமனு வழங்கக் கோரி விண்ணப்பித்தார். இதைய டுத்து அவருக்கு வேட்புமனு வழங்கப்பட்டது. அதை பெற்ற பத்மராஜன் அங்கேயே அமர்ந்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேர்தல் நடத்தும் அதிகாரி மோகன்தாஸிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். சுயேச்சையாக போட்டியிடுபவர்கள் 10 எம்எல்ஏக் கள் முன்மொழிய விண்ணப்பிக்க வேண்டும். அதையும் பத்மராஜன் தாக்கல் செய்யவில்லை.
அதையடுத்து பத்மராஜன் கூறியதாவது:
தேர்தலில் போட்டியிடுவதில் எனக்கு விருப்பம் உண்டு. இதுவரை 171 முறை வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். வாஜ் பாய், நரசிம்மராவ், ஜெயலலிதா தொடங்கி மோடி வரை பலருக்கு எதிராக தேர்தலில் மனு தாக்கல் செய்துள்ளேன்.
அடுத்து நடிகர் சங்கத்தேர் தலிலும் தலைவர் பதவிக்கு போட்டியிடுவேன். ஏனெனில் நான் நாடக நடிகராக உள்ளேன். கின்னஸ் சாதனை செய்வதே எனது இலக்கு. தேர்தலில் போட்டியிடுவதற்காக டெபாசிட் கட்டிய வகையில் இதுவரை ரூ.20 லட்சம் வரை இழந்துள்ளேன்.
எனக்கு தோல்வியில் தான் சந்தோஷம். வெற்றி கிடைத் திருந்தால் அத்துடன் முடங்கியிருப் பேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.