தமிழகம்

உலைப்பட்டியில் அகழாய்வு நடத்தக்கோரி வழக்கு: தொல்லியல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு

கி.மகாராஜன்

உசிலம்பட்டி அருகே உலைப்பட்டியில் அகழாய்வு நடத்தக்கோரிய மனு தொடர்பாக தொல்லியல் ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் உப்பூரைச் சேர்ந்த தீரன் திருமுருகன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

உசிலம்பட்டி சூலப்புரம் அருகே உலைப்பட்டி கிராமத்தில், காந்திகிராம பல்கலைகழகத பேராசிரியர் முருகேசன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் சென்ராயன் ஆகியோர் ஆய்வு செய்து அங்கு கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த அடக்கஸ்தலம் இருப்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து அங்கு தமிழக தொல்லியல் துறையினர் சக்திவேல் தலைமையில் ஆய்வு செய்து பல ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய இரும்பு உருக்கு உலை கண்டுபிடிக்கப்பட்டது.

இப்பகுதியில் கப்புக்கல் என்று கூறப்படும் நினைவு கற்கள் அதிகளவில் உள்ளன. இங்கு அகழாய்வை தொடர்ந்தால் கீழடியை விட மிகப்பழமையான சான்றுகள் கிடைக்கும். வைகை நாகரிகத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பெரும் அடையாளமாக இப்பகுதி திகழும். எனவே உலைப்பட்டியில் அகழாய்வு மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு விசாரித்து, தமிழக தொல்லியல் துறை ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவ. 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT