தமிழகம்

தூத்துக்குடி ஆவின் நிர்வாகக்குழு தேர்தல் வழக்கில் கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்

கி.மகாராஜன்

தூத்துக்குடி ஆவின் நிர்வாகக்குழு தேர்தலை விதிப்படி புதிய வாக்காளர் பட்டியல் தயாரித்த பிறகு நடத்தக்கோரிய வழக்கில் மாநில கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெயரதி, ஸ்டெல்லா ஆகியோர் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தூத்துக்குடி ஆவின் நிர்வாகக்குழு தேர்தலுக்கு பிப்ரவரி 27-ல் 29 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

இதில் 19 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 10 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ஏற்றுக்கொள்ளப்பட்ட 19 பேரில் பலர் சங்க உறுப்பினர்களாக இல்லை. சட்டவிரோதமாக அவர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டு, உறுப்பினர்களாக இருப்பவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

வாக்காளர் பட்டியலில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருக்கும். ஆனால் தேர்தல் அதிகாரி முன்னறிவிப்பு இல்லாமல் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் உறுப்பினராக இல்லாதவர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளார்.

எனவே தூத்துக்குடி ஆவின் நிர்வாகக்குழு தேர்தலுக்கு முறையான வாக்காளர் பட்டியல் தயாரித்து, வேட்புமனுக்களை முறையாக பரிசீலித்து, அதன் பிறகு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயனன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக தமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT