திருநெல்வேலியில் பட்டா மாற்றம் செய்ய காலதாமதம் செய்த சேவை குறைபாடு காரணமாக பதிவு அலுவலர், வட்டாட்சியர், மாநகராட்சி உதவி ஆணையர், நில அளவையருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் 1 மாதத்துக்குள் உட்பிரிவுடன் பட்டா மாறுதல் செய்து கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டையை சேர்ந்த பாத்திமுத்து ஜெகராள் என்பவர் கடந்த 4.9.2015-ம் தேதி ரூ.23,225 செலுத்தி கிரைய பத்திரம் பதிவு செய்தார். கிரையம் செய்யும்போதே பட்டா மாற்றம் செய்வதற்கும் சார்பதிவாளர் அலுவலகத்தில் கட்டணம் செலுத்தியிருந்தார்.
ஆனால் பட்டா மாற்றம் மற்றும் உட்பிரிவு செய்து கொடுக்காமல் ஓராண்டுக்குமேல் அலைக்கழிப்பு செய்து, காலதாமதம் செய்ததால் திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரம்மா மூலம் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்ற தலைவர் தேவதாஸ், உறுப்பினர்கள் சிவன்மூர்த்தி, முத்துலெட்சுமி ஆகியோர் விசாரித்து, பட்டா மாறுதல் செய்து கொடுக்காமல் காலதாமதம் செய்தது சேவை குறைபாடு என்பதை சுட்டிக்காட்டி, திருநெல்வேலி சார்பதிவாளர் அலுவலக பதிவு அலுவலர், பாளையங்கோட்டை வட்டாட்சியர், திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை வார்டு அலுவலக உதவி ஆணையர், பாளையங்கோட்டை நகர்ப்புற நில அளவையர் ஆகியோர் சேர்ந்து மனுதாரரான பாத்திமுத்து ஜெகராளுக்கு பட்டா மாறுதல் செய்து கொடுக்காததால் ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு ரூ.15 ஆயிரம், வழக்கு செலவு ரூ.5 ஆயிரம் சேர்த்து மொத்தம் ரூ.20 ஆயிரம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்றும், ஒரு மாத காலத்துக்குள் உட்பிரிவுடன் பட்டாமாறுதல் செய்து கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.