நடிகர் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்தில் பாடல் ஒன்றின் வரிகளில் சமூகங்களுக்கு இடையே பகை மூட்டுவது போன்று உள்ளதால், அப்படத்தைத் தடை செய்யக்கோரி புகார் அளித்தும் போலீஸ் நடவடிக்கை இல்லை என வழக்குத் தொடரப்பட்டது. இது தொடர்பான புகாரைப் பெற காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் அஞ்சே அள்ளியைச் சேர்ந்த ஏ.கார்த்திக் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.
அவரது மனுவில், ''நடிகர் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில், "கீழ்சாதி உடம்புக்குள்ள ஓடுறது சாக்கடையா, அந்த மேல் சாதிகாரனுக்கு ரெண்டு கொம்பு இருந்தா காட்டுங்கையா" என்ற வரிகள் அமைந்துள்ளன.
இந்தப் பாடல் வரிகள் சாதிப் பிரிவினையைத் தூண்டும் வகையில் உள்ளதால், இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கடந்த மார்ச் 20-ம் தேதி அஞ்சல் மூலம் தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்குப் புகார் அனுப்பினேன்.
அனைத்துச் சாதியினரும் அமைதியாக வாழும் தமிழகத்தில் இதுபோன்ற பாடல் வரிகள் பிரச்சினை ஏற்படுத்தும் என்பதால், 2022-ம் ஆண்டு வரை ‘சூரரைப் போற்று’ படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் எனப் புகாரில் கோரிக்கை வைத்தேன்.
அந்தப் புகாரை அனுப்பி 5 மாதங்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. என் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் காவல்துறைக்கு உத்தரவிடவேண்டும்'' எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், மனுதாரர் கார்த்திக்கின் புகார் காவல் கண்காணிப்பாளருக்கு வந்து சேரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, காவல் கண்காணிப்பாளருக்கு மீண்டும் புகார் மனுவை அளிக்க மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதி, அந்தப் புகாரை சட்டப்படி பரிசீலித்து உரிய முடிவெடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.