நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் சொல்வதில் ஒரு நியாயம் இருக்கிறது என்றும், அவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் கி.ரா. தொடர்ந்து எழுதுவதில் மும்முரமாகவே இயங்குகிறார். 98 வயதை நிறைவு செய்து இன்று (செப்.16) 99-வது வயதில் அடியெடுத்து வைத்த சூழலில் பழைய விஷயங்களை ஞாபகத்துடன் சுவாரசியமாக எடுத்துரைக்கிறார்.
கரோனா காலத்தில் அவர் தனது கைப்பட எழுதிய 'அண்டரெண்டப் பட்சி' நூலை அச்சில் ஏற்றாமல் கைப்பிரதியாகவே வெளியிட்டுள்ளார். தான் எழுதாமல் விட்ட கதைகளை தொகுத்து 'மிச்ச கதைகள்' என்ற புத்தகத்தையும் எழுதி வருகிறார். அத்துடன் பத்து கட்டுரைகள் வரை எழுதியுள்ளார்.
எவ்வளவு கேள்வி கேட்டாலும் சுவாரசியம் குறையாமல் வெளிப்படையாக பதில் தருகிறார். 99 வயதில் அடியெடுத்து வைத்துள்ள அவரிடம் இயல்பாக உரையாடினோம்.
99 வயதில் அடியெடுத்து வைத்துள்ள சூழலில், தொடர்ந்து அதிவேகமாக கதைகள், கட்டுரைகள் எழுதிக் குவிக்க சிறப்புக் காரணமுள்ளதா?
கடைசியில் அப்படிதான், அந்த மாதிரிதான் இருக்கும். வேகமாக எழுதிவிட வேண்டும்.
'அண்டரெண்டப் பட்சி' நூலை அச்சுக்குக் கொண்டு வராமல் கைப்பிரதியாகவே வெளியிடக் காரணமுள்ளதா?
அச்சில் வந்தால் கைது செய்ய வாய்ப்பு இருக்கு. பெரியவர்களுக்கே பாலியல் விசயங்கள் இவ்வளவு நாட்கள் ஆகியும், தெரியல. அதுதான் முக்கியக் காரணம்.
கி.ரா. விருதுக்கு கண்மணி குணசேகரனைத் தேர்வு செய்ததற்கான முக்கியக் காரணம்?
கண்மணி குணசேகரன் என் மாதிரி. பள்ளிக்கூடத்துக்கு நான் முழுசாகப் போகவில்லை. அவர் ஐடிஐ வரை படிச்சிருக்கார். மனிதர்களை, தனது மக்களைப் படித்து, அவர் கதைகள் எழுதுகிறார். பேச்சு நடையில் கதை எழுதுகிறார். அது மத்தவங்களுக்கு விளங்காது. புரிய வைக்க அகராதி தயாரித்தார். அந்தக் கஷ்டம் எனக்குத் தெரியும். எழுத்தாளர் அகராதி போட்டு, மக்கள் பற்றிக் கதைகள், நாவல்கள் எழுதி மக்கள் எழுத்தாளராக இருக்கிறார். மார்க்சிம் கார்க்கி போல் இவரைச் சொல்லலாம். இவரை யாரும் உற்சாகப்படுத்தவில்லை. அதற்காவே பாராட்டுறோம். அது நல்ல காரியம்.
நீட் தேர்வு பற்றி உங்கள் கருத்து என்ன?
நீட் தேர்வு பற்றி எனக்குத் தெரியாது. (இதையடுத்து அங்கிருந்தோர் நீட் தேர்வு பற்றியும், மாணவர்கள் தற்கொலை வரையும் தெரிவித்தனர்) மாணவர்கள் சொல்வதில் ஒரு நியாயம் இருக்கு. அவர்களுக்கு உதவணும். மாணவர்களின் விருப்பத்தை நிறைவேற்றணும். மாணவர்களை ஆதரிக்கிறேன்.
பிறந்த நாளில் அனைவரும் வாழ்த்துகிறார்கள். இப்போது உங்கள் மனதில் ஏதும் லட்சியம் வைத்துள்ளீர்களா?
எழுத்தாளர் லட்சியமே புதுப் புத்தகம் எழுதுவதுதான். புத்தகம்தான் எழுதுவேன்.
இவ்வாறு கி.ராஜநாராயணன் தெரிவித்துள்ளார்.