ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்த ஊதியத்தை வழங்காத ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
சிஐடியு சார்ந்த திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி - உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று (செப். 16) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், "தமிழ்நாடு முதல்வர் அறிவித்தவாறு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குவோருக்கு ரூ.4,000, தூய்மைக் காவலர்களுக்கு ரூ.3,600 வீதம் ஊதியம் வழங்குவதற்கான அரசாணையை உடனே வெளியிட வேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு, ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்களுக்கு அரசாணையின்படி பணிக் கொடை ரூ.50 ஆயிரம் மற்றும் மாத ஓய்வூதியம் ரூ.2,000 வீதம் வழங்க வேண்டும். 7-வது ஊதியக் குழு பரிந்துரைத்த ஊதியத்தை வழங்காத ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். சிஐடியு புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜன், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.