முன்னாள் முதல்வர் கருணாநிதி திறந்ததால் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கிறீர்களா? என எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் பேரவையில் கேள்வி எழுப்பினார். பல்கலைக்கழகம் பிரிக்கப்படுவதில் மாணவர் நலன் தவிர வேறு எந்தக் காழ்ப்புணர்ச்சியும் இல்லை என முதல்வர் பழனிசாமி பதிலளித்தார்.
வேலூர், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு விழுப்புரத்தைத் தலைமையிடமாக கொண்டு பல்கலைக்கழகம் உருவாக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.
''அப்பகுதி சட்டப்பேரவை உறுப்பினர் என்கிற முறையில் என்னிடம் கருத்துக் கேட்கவில்லை. முன்னாள் முதல்வர் கருணாநிதி திறந்ததால் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கிறீர்களா?'' என எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் ஆட்சேபம் தெரிவித்தார்.
இந்நிலையில், விழுப்புரத்தில் புதிய பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பாக முதல்வர் பழனிசாமி பேரவையில் அளித்த விளக்கம்:
“எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆதங்கப்பட வேண்டிய அவசியமே இல்லை. கல்விக்கு முன்னுரிமை கொடுப்பதற்காகத்தான் இந்தப் பல்கலைக்கழகம் பிரிக்கப்படுகிறது. அது உங்களுக்குத் தெரியும். அது பிற்படுத்தப்பட்ட பகுதி. அங்கு இருக்கின்ற மாணவர்கள் மேலும் உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில்தான் இந்தப் பல்கலைக்கழகம் பிரிக்கப்பட்டதே தவிர, வேறு ஒன்றும் இல்லை.
இப்பொழுது புதிய கல்லூரிகள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. சட்டத்துறை அமைச்சர் சொல்கின்றபொழுது எத்தனை கல்லூரிகள் இப்பொழுது உருவாக்கப்பட்டு உள்ளன என்று குறிப்பிட்டார். அதற்குத் தக்கவாறு, பல்கலைக்கழகங்களைப் பிரித்தால்தான் நிர்வாக வசதி சிறப்பாக இருக்கும்.
மாணவர்களுடைய எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற அடிப்படையில்தான் இந்தப் பல்கலைக்கழகம் பிரிக்கப்பட்டதே தவிர, நீங்கள் சொல்வதைப் போல காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லை என்பதை எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு புதிய பல்கலைக்கழகம் உருவாகிறது, பிரித்துக் கொடுக்கிறோம். அவ்வளவுதான். தமிழ்நாட்டில் இருக்கும் பல்கலைக்கழகங்களைப் பிரித்துதான் ஒன்றோடு இணைத்திருக்கிறோம். ஏற்கெனவே கூறிய மாதிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருக்கின்ற கல்லூரிகளையெல்லாம் ஒன்றாக இணைத்து, புதிய பல்கலைக்கழகம் உருவாக்குகிறோம். இதில் என்ன பிரச்சனை இருக்கிறதென்றுதான் எனக்குத் தெரியவில்லை.
ஏன் இவ்வளவு ஆதங்கப்படுகிறீர்கள்? பல்கலைக்கழகம் பிரிப்பதற்கே நீங்கள் விடமாட்டேன் என்கிறீர்கள், பெயர் வைத்தால் விடவா போகிறீர்கள்? ஆகவே, மாணவர்களுடைய எதிர்காலம், பெற்றோர்களுடைய எதிர்காலம், அவர்கள் வைக்கின்ற கோரிக்கையை அரசு நிறைவேற்றுவது அரசினுடைய கடமை. அதனால்தான் நாங்கள் செய்கிறோம்.
இன்றைக்குப் புதிதாக அரசு கலைக் கல்லூரிகளை எவ்வளவு உருவாக்கியிருக்கிறோம், சட்டக் கல்லூரிகளை எவ்வளவு உருவாக்கியிருக்கிறோம், மருத்துவக் கல்லூரிகளை எவ்வளவு உருவாக்கியிருக்கிறோம். ஆகவே, கல்லூரிகள் அதிகமாக இருக்கும்பொழுது நிர்வாக வசதிக்காகப் பிரிக்கிறோமே தவிர நீங்கள் சொல்வதுபோல எந்தவிதக் காழ்ப்புணர்ச்சியும் இல்லை என்பதை மீண்டும், மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்''.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பதிலளித்தார்.