தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) புதிய விதிமுறை காரணமாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பிஎட் படிப்பில் 200 இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
என்சிடிஇ-யின் விதிமுறைப்படி, 2015-16-ம் கல்வி ஆண்டில் பி.எட். படிப்புக் காலம் 2 ஆண்டுக ளாக உயர்த்தப்படும் என்று அரசு அறிவித்து அதற்கான அரசா ணையும் வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளிலும், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் சேர்த்து பிஎட் படிப்பில் ஏறத்தாழ 2,100 இடங்கள் உள்ளன.
பிஎட் படிப்புக் காலம் ஓராண் டிலிருந்து 2 ஆண்டுகளாக அதிகரிக்கப்படுவதால் மாணவர்கள் 2 ஆண்டுகள் படிக்கும் வகையில் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும் என்று என்சிடிஇ விதிமுறையை வரையறுத்துள்ளது. இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதி இல்லாத கல்வியியல் கல்லூரி களில் பிஎட் இடங்களின் எண்ணிக் கையை என்சிடிஇ குறைத்துவிட்டது.
அந்த வகையில், தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பிஎட் படிப்பில் ஏறத்தாழ 200 இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால், இந்த ஆண்டு பிஎட் மாணவர் சேர்க்கையின்போது கட் ஆப் மதிப்பெண் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில் பிஎட் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வருகிற 3-ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன. இதற்காக 8 ஆயிரம் விண்ணப்பப் படிவங்கள் அச்சடிக்கப்பட்டிருப்பதாகவும், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு செப்டம்பர் மாதம் இறுதி வாரத்தில் நடத்தப்படும் என்றும் தமிழ்நாடு பிஎட் மாணவர் சேர்க்கை செயலாளரும், கலந்தாய்வை நடத்தவுள்ள சென்னை லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தின் முதல்வருமான பேராசிரியை பாரதி தெரிவித்தார்.