சேலம் காமலாபுரம் விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு போலீஸாருக்கு கரோனா தொற்று உறுதியாகி, மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் சேலம்-சென்னை இடையே வாரம் இரண்டு முறை பயணிகள் விமானம் இயக்கப்படுகிறது.
விமான நிலைய பாதுகாப்பு பணியில் 35 போலீஸார் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் ஆத்தூர் மற்றும் தேவூரைச் சேர்ந்த போலீஸார் இருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, விமான நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பள்ளி ஆசிரியருக்கு கரோனா
சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளருக்கு கரோனா தொற்று உறுதியாகி அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப் பட்டுள்ளார். இதைய டுத்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் மூடப்பட்டு கிருமிநாசினி தெளித்து தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
சேலம் கோட்டை மகளிர் மேல் நிலைப்பள்ளியில் கடந்த வாரம் ஒரு ஆசிரியருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து, மாணவியர் சேர்க்கை நிறுத்தப்பட்டு, 92 ஆசிரியர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், மேலும் ஒரு ஆசிரியருக்கு தொற்று உறுதியானது.
இதேபோல, குகை மூங்கபாடி பள்ளியில் ஏற்கெனவே ஒரு ஆசிரியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அதே பள்ளியைச் சேர்ந்த ஒரு ஆசிரியருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
2,628 பேர் மீண்டனர்
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 97 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய அரசு மருத்துவமனைகளிலும், சிலர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டுள்ளனர்.
இதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 3,559 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 2,628 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
நேற்று ஒருவர் கரோனா தொற்றால் உயிரிழந்தார். இவர் உள்பட இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 879 பேர் மருத்துவமனையில் தனிமைப்படுத்துப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.