தமிழகம்

செந்தில் பாலாஜி மீதான பணமோசடி புகார்: போக்குவரத்து அதிகாரிகள் 3 பேருக்கு சம்மன்

செய்திப்பிரிவு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2015-ம் ஆண்டு வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர், தற்போது திமுக கரூர் மாவட்டப் பொறுப்பாளராகவும் அரவக்குறிச்சி தொகுதி எம்எல்ஏவாகவும் உள்ளார்.

செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 81 பேரிடம் சுமார் ரூ.1.52 கோடி மோசடியில் ஈடுபட்டதாக அம்பத்தூரைச் சேர்ந்த கணேஷ்குமார், சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், வழக்கு விசாரணை சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்களின் மீதான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து அங்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், அவரது ஆதரவாளர்கள் வீடுகள் என சென்னை, கரூர், மதுரை ஆகிய பகுதிகளில் சுமார் 10 இடங்களில் மத்தியக் குற்றப்பிரிவினர் கடந்த 11-ம் தேதி திடீர் சோதனை நடத்தினர். சென்னை ஜெ.ஜெ.நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் கணேசன் வீட்டிலும் சோதனை நடைபெற்றிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய மாநகர போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் 3 பேருக்கு சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் வரும் 18-ம் தேதி நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளனர்.

SCROLL FOR NEXT