மதுரை மத்திய சிறையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரித்து அந்த தண்ணீரை தொட்டிகளில் தேக்கி, கடலில் மட்டுமே வளரும் ‘வாவல்’ ரக மீன்களை செயற்கை முறையில் கைதிகள் வளர்த்து வருகின்றனர்.
சிறைவாசிகள் மறுவாழ்வுக்காகவும், அவர்கள் உறவினர்கள், குடும்பத்தினருக்கு மாதந்தோறும் நிரந்தர வருவாய் கிடைக்கவும் தற்போது சிறைத்துறை நிர்வாகம் சிறையிலேயே கைதிகளுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்து சுய தொழில்கள் செய்து சம்பாதிக்க வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது. இவர்கள் தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்தி கிடைக்கும் லாபத்தில் 20 சதவீதத்தை அவர்களுக்கு ஊதியமாக வழங்குகிறது. மதுரை மத்திய சிறைச்சாலையில் 750 தண்டனைக் கைதிகள் உட்பட 1,300 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறையில் இருந்து ஒரு நாளைக்கு 20 ஆயிரம் லிட்டர் கழிவுநீர் வெளியேறுகிறது. இந்த நீரை சுத்திகரித்து அந்த தண்ணீர் மூலம் கைதிகள் காய்கறிகள், வாழை, கீரை, மலர்கள் சாகுபடி செய்து பொதுமக்களுக்கு விற்கின்றனர். தற்போது இந்த தண்ணீரை பெரிய தொட்டிகளில் தேக்கி, மீன்களை வளர்த்து பிடித்து விற்கின்றனர்.
இந்த மீன்களுக்கு மதுரை மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், தற்போது தமிழகத்தில் முதன்முறையாக தொட்டிகளில் செயற்கை முறையில் கடல் மீன்களையும் விட்டு வளர்க்கத் தொடங்கியுள்ளனர். பொதுவாக, கடல் மீன்கள், மற்ற தண்ணீரில், தொட்டிகளில் செயற்கை முறையில் வளராது. அதனால், பரிசோதனை முறையில் தற்போது ‘வாவல்’ என்ற 20 கடல் மீன் குஞ்சுகளை விட்டுள்ளனர். கைதிகளின் பராமரிப்பால் தொட்டிகளிலே விடப்பட்டு 3 மாதமாகியும், இந்த ‘வாவல்’ கடல் மீன்களில் ஒரு மீன் கூட இதுவரை இறக்கவில்லை. சரியான விகிதத்தில் கடலில் வளர்வதைப் போல இந்த ‘வாவல்’ கடல் மீன்கள் நன்கு வளர்ச்சியடைந்து வருகின்றன. அதனால், இனி மதுரை மக்களுக்கு கடல் மீன்களும் உயிருடன் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
சிறைச்சாலை கண்காணிப்பாளர் அறிவுடை நம்பி நேற்று கூறியதாவது: ஆரம்பத்தில் கட்லா, விரால், சாதாக்கெண்டை உள்ளிட்ட குளம், குட்டைகளில் வளரும் 5 ஆயிரம் மீன் குஞ்சுகளை கைதிகள் வளர்த்து வந்தனர். தற்போது, பரிசோதனை அடிப்படையில் கடல் மீன்களை வளர்க்கத் தொடங்கியுள்ளனர். இந்த கடல் மீன்கள் எதிர்பார்த்தபடி வளர்ந்தால், மேலும் 5 ஆயிரம் மற்ற ரக கடல் மீன் குஞ்சுகளையும் தொட்டிகளில் விட்டு கைதிகள் மூலம் வளர்க்கத் திட்டமிட்டுள்ளோம். மீன்களை உயிருடன் விற்பனை செய்வதால், வெளிமார்க்கெட்டை விட கூடுதலாக ரூ. 20-க்கு விற்கிறோம். வாரந்தோறும் பிடித்து விற்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முள்ளைக்கூட சாப்பிடலாம்
வாவல் மீன்களில் பல ரகங்கள் உண்டு. இந்த மீன்களுக்குத்தான் சந்தைகளில் அதிக விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஒரே மீன் அரை கிலோ எடை வரை இருந்தால், இந்த வகை மீன் கிலோ ரூ. 800 வரை விற்கப்படுகிறது. ஒரு மீன் 100 கிராம் எடை இருந்தால் ஒரு கிலோ ரூ. 400-க்கு விற்கப்படுகிறது. வாவல் மீன்கள் கடலில் மட்டுமே வளரும் தன்மை கொண்டவை. இந்த மீன்களை, தற்போதுதான் செயற்கையாக உப்புத் தண்ணீரில் வளர்க்கும்முறை பரிசோதனையிலே உள்ளது.
கடலில் பிடிக்கக்கூடிய வாவல் மீன்களின் மணம், ருசி அருமையாக இருக்கும். இந்த மீனில் உள்ள முள் கூட ருசியாக இருப்பதால், அவற்றை கடித்து சாப்பிடலாம். ஆடு, கோழி இறைச்சியைக் காட்டிலும் வாவல் மீனில் புரதச் சத்தும் அதிகம்.