சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று இரண்டு இடங்களில் மர்ம பொருட்களால் வெடிகுண்டு பீதி ஏற்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மெட்ராஸ் பார் அசோசியேஷன் அருகில் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கான கழிப்பறைகள் உள்ளன. இதில் பொதுமக்களுக்கான ஆண்கள் கழிப்பறையில் நேற்று காலை 11.15 மணியளவில் அலாரம் சத்தம் கேட்டது. இதைக்கேட்டு அங்கிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீஸார் மற்றும் வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டன. வெடிகுண்டு நிபுணர்கள் கழிப்பறைக்குள் சென்று பார்த்தபோது, அங் கிருந்த வெள்ளை நிற துணியில் சுற்றப்பட்டிருந்த பார்சலில் இருந்து சத்தம் வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த போது, அந்த பார்சலில் வெடி குண்டு இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.
பார்சலை பிரித்துப் பார்த்த போது, அதில் 2 சிறிய கடிகாரங்கள் மற்றும் மூன்று பக்க கடிதம் ஆகியவை இருந்தன. அந்த கடிதத்தில், “அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது அதிகரித்துள்ளது. அவர்களை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று எழுதி மக்கள் செய்தி என்று குறிப்பிட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற் குள், மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு செல்லும் ‘லிப்ட்’ அருகே பழைய பொருட்கள் போடப்பட்டிருந்த இடத்தில் இருந்தும் அலாரம் சத்தம் வந்தது. வெடிகுண்டு நிபுணர்கள் அங்கே சென்று சோதனையிட்டபோது, கழிவறையில் இருந்து எடுக்கப் பட்டது போன்ற பார்சல் இருப்பது தெரியவந்தது.
அதிலும், இரண்டு சிறிய கடிகாரங்களும், 3 பக்க கடிதமும் இருந்தன. உயர் நீதிமன்றத்தில் ஒரே நேரத்தில் இரண்டு இடங் களில் வெடிகுண்டு பீதியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை யடுத்து உயர் நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. உயர் நீதிமன்ற வளாகத்தில் அலாரம் கடிகாரங்களை வைத்தது யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.