தமிழகம்

தமிழக ஐபிஎஸ் அதிகாரியின் சீருடைப் பணியாளர் விதிமீறல்: முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

செய்திப்பிரிவு

தமிழக ஐபிஎஸ் கேடர் அதிகாரியான ஏடிஜிபி சந்தீப் மிட்டல் சீருடைப் பணியாளர் விதிகளை மீறி ட்விட்டரில் அரசியல் ஆதரவுக் கருத்துகளைப் பதிவிடுவது குறித்து முதல்வர் பழனிசாமிக்கு சிபிஎம் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எழுதிய கடிதம்:

“பணியில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு உள்ள விதிகளில், அவர்கள் பொது வெளியில் வெளிப்படுத்தும் கருத்துகள் அரசியல் நோக்கம் கொண்டவையாக இருக்கக் கூடாது என்பதும் ஒன்றாகும். மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைப் பாதுகாப்பதே அவர்களுக்கு உள்ள கடமை.

தமிழக அரசின் கீழ் கூடுதல் டி.ஜி.பி.யாகப் பணியாற்றி வரும் சந்தீப் மிட்டல் தனது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து இயங்குகிறார். இந்தப் பக்கம் அதிகாரபூர்வமான ஒன்று. ட்விட்டர் வெரிபிகேஷன் பெற்றது. இந்தப் பக்கத்தில் அவர் தொடர்ச்சியாக மத்திய ஆளும் கட்சி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஆளும் கட்சி சார்பு இயக்கங்களின் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.

உதாரணமாக, ஆகஸ்ட் 23 ஆம் தேதி மேற்கொண்ட பதிவில், இடதுசாரிகளும், இஸ்லாமிய கருத்து கொண்டவர்களும் இந்த நாட்டின் வரலாற்றைப் பல நூற்றாண்டுகளாக வல்லுறவு செய்து வருவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆகஸ்ட் 2 ஆம் தேதியன்று ‘புதிய கல்விக் கொள்கையை கம்யூனிஸ்டுகளையும், கடும் இஸ்லாமியர்களையும் சலசலக்க செய்ய 3 காரணங்கள்’ என்ற கருத்துடன், ஒரு கட்டுரையைப் பகிர்ந்திருந்தார்.

வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர் உள்ளிட்டோர் அரசுக்கு எழுதிய கடிதத்திற்கு நோக்கம் கற்பிக்கும் பதிவினை ஜூலை 13 அன்று மேற்கொண்டுள்ளார். மேலும், மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள், கரோனா கால நிவாரணம் வலியுறுத்தி நடத்திய மக்கள் போராட்டத்திற்கு உள்நோக்கம் கற்பித்தும் பதிவு மேற்கொண்டுள்ளார்.

இவ்வாறான பதிவுகளை ஒட்டி அவருடைய ட்விட்டர் பக்கத்தைப் படிக்கும்போது அவருடைய பல பதிவுகள் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் சார்பு அமைப்புக்களை சார்ந்தவையாக இருக்கின்றன. ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் பேச்சுகளைப் பகிர்ந்துள்ளார்.

இந்தியக் குடிமக்களுக்கு அவரவர் விரும்பும் அரசியலைத் தேர்வு செய்திட, ஆதரிக்க உரிமை உண்டு. ஆனால், பதவியில் உள்ள அதிகாரி அதனை மேற்கொள்ளும்போது கடமை தவறியவராகிறார். சீருடைப் பணியாளர்களுக்கான நடத்தை விதிப்படியும், சட்டப்படியும் அவருடைய செயல்பாடுகள் தண்டனைக்குரியவையாகும்.

இவருடைய பதிவுகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் எதிரானதாகவும், பொது அமைதிக்குப் பங்கம் விளைவிப்பதாகவும் இருக்கின்றன. எனவே இவர் பதவியில் நீடிப்பதற்குத் தகுதியற்றவராகிறார். தமிழ்நாடு காவல்துறையின் கீழ் செயல்படும் அதிகாரியாக இருப்பதால், அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தங்கள் கவனத்திற்கு இப்பிரச்சினையைக் கொண்டுவருகிறேன்”.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT