தனியார் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் கரோனா வைரஸ் தொற்றுப் பரிசோதனை விவரங்களை உடனுக்குடன் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் எனக் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு நிகராக அத்தொற்றினைக் கட்டுப்படுத்துதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரோனா வைரஸ் தொற்று அதிகமுள்ள பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுவதுடன், அறிகுறி உள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குப் பரிசோதனை செய்யப்படுகிறது.
தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டவுடன், அவர்கள் நோய்த் தொற்று அறிகுறிகளின் அடிப்படையில் கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் கரோனா தொற்று சிகிச்சை மையம் எனத் தன்மைக்கேற்றவாறு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில் ‘கரோனா தொற்று உள்ளதா எனப் பரிசோதிக்கும் தனியார் ஆய்வகங்கள் தங்களின் ஆய்வகங்களில் பரிசோதிக்கப்படும் மாதிரிகளின் முடிவுகளைத் தாமதமின்றி வெளியிட வேண்டும்’ எனவும், ‘மாதிரிகள் பெறப்பட்டவுடன் 12 மணி நேரத்திற்குள் முடிவுகளைத் தெரிவிக்க வேண்டும்’ எனவும் தெரிவிக்கப்பட்டது. அவற்றில் குறிப்பாக ‘கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் மருத்துவமனைக்குச் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்; உடனடியாக அவர்களின் தொடர்பு விவரத்தினை சுகாதாரத்துறை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சிக்குத் தெரிவிக்க வேண்டும்!’ எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்து.
இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகத் தனியார் ஆய்வகங்கள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் கு.இராசாமணி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் குமரவேல் பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாநகராட்சி துணை ஆணையர் மதுராந்தகி, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் காளிதாசு, இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) மரு.கிருஷ்ணா, மாநகராட்சி நகர் நல அலுவலர் மரு.ராஜா, தனியார் கரோனா தொற்று பரிசோதனை மையங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் தனியார் கரோனா தொற்றுப் பரிசோதனை மையங்களின் பிரதிநிதிகளிடம் மாவட்ட ஆட்சியர் பல்வேறு விஷயங்களை அறிவுறுத்தினார்.
அப்போது அவர் கூறியதாவது.
''அனைத்துத் தனியார் ஆய்வகங்களிலும் பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம் அவசியம் பரிசோதனை செய்ய வேண்டும். அத்துடன் அதில் தொற்று அறிகுறி உள்ளவர்களை சோதனை முடிவு வரும் முன்னரே மருத்துவமனைக்கு அனுப்பிட நடவடிக்கை எடுத்திட வேண்டும். கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றினைக் குறைத்திடும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி எடுத்தும் வரும் நடவடிக்கைக்கு தனியார் பரிசோதனை மையங்கள் மிகுந்த ஒத்துழைப்பு தருவதுடன், அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலித்திட வேண்டும்.
கரோனா வைரஸ் தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ள வரும் மக்களிடம் வைரஸ் தொற்று குறித்த பாதுகாப்பு வழிமுறைகளையும் தெரிவிக்க வேண்டும். கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் இன்றியமையாதது, புதிய தொற்றுகளை உடனடியாகக் கண்டறிதல் ஆகும்.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புதிய தொற்று குறித்த மாதிரிகள் எண்ணிக்கை அதிக அளவில் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அவற்றுக்கான ஆய்வு முடிவுகளை உடனடியாகப் பரிசோதித்துக் கண்டறிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். அனைத்து நிலையிலும் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று குறைவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்.''
இவ்வாறு ஆட்சியர் கு.ராசாமணி தனியார் பரிசோதனை மையங்களின் நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டார்.