பிரதிநிதித்துவப் படம். 
தமிழகம்

கிசான் சம்மன் திட்டத்தில் முறைகேடு புகார்: ராணிப்பேட்டை மாவட்டத்தில் கணினி ஆபரேட்டர் கைது

வ.செந்தில்குமார்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிசான் சம்மன் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக கணினி ஆபரேட்டர் ஒருவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். முறைகேடாகப் பெற்ற பணத்தைத் திரும்பச் செலுத்த வரும் 18-ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது.

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பிரதமரின் கிசான் சம்மன் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு தொடர்பாக வேலூர் சிபிசிஐடி போலீஸார் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் சுமார் 3,700 தகுதியில்லாத விவசாயிகள் இணைக்கப்பட்டு ரூ.1.20 கோடி அளவுக்கு முறைகேடு செய்திருப்பது தெரியவந்துள்ளது.

இவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ள நிலையில் முறைகேடாகப் பெற்ற பணத்தைத் திரும்பப் பெற 7 வட்டாரங்களில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் குழுவினர் இதுவரை ரூ.61 லட்சம் பணத்தைத் திரும்பப் பெற்றுள்ளனர். மீதமுள்ள பணத்தைத் திரும்பப் பெறும் பணியில் வேளாண் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிசான் சம்மன் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் 2,816 தகுதியில்லாத விவசாயிகள் இணைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. முறைகேடாக ரூ.1.12 கோடி பணம் பெற்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.45 லட்சம் பணம் திரும்பப் பெற்றுள்ளனர். மீதமுள்ள தொகையை வசூலிக்கும் பணியில் வேளாண் அதிகாரிகள், வருவாய்த் துறையினர் அடங்கிய குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

பணத்தை நேரடியாக வசூலிக்காமல் அவர்களின் வங்கிக் கணக்கில் மீண்டும் செலுத்தி அதை நேரடியாக கிசான் சம்மன் திட்டக் கணக்கில் சேர்த்து வருகின்றனர்.

இது தொடர்பாக வேளாண் அதிகாரிகள் கூறும்போது, "ராணிப்பேட்டை மாவட்டத்தில் முறைகேடாகப் பணம் பெற்றவர்கள் வரும் 18-ம் தேதிக்குள் அந்தப் பணத்தை திரும்பச் செலுத்த கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகும் பணம் செலுத்தவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்" என்று தெரிவித்தனர்.

ஒருவர் கைது

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு தொடர்பாக வேலூர் சிபிசிஐடி காவல் ஆய்வாளர் வஜ்ஜிரவேல் தலைமையிலான குழுவினர் விசாரித்து வருகின்றனர். கடந்த நான்கு நாட்களுக்கும் கலவை, சோளிங்கர் வட்டாரங்களில் தீவிரமாக விசாரித்து வந்த நிலையில் சோளிங்கர் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணியாற்றிவந்த கணினி ஆபரேட்டர் சுப்பிரமணி (27) என்பவரைக் கைது செய்துள்ளதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT