தமிழகம்

நீட் தேர்வை எதிர்த்துக் கடற்கரையில் உண்ணாவிரதம் இருக்க நாங்கள் தயார்; எங்களுடன் இணைய நீங்கள் தயாரா?- முதல்வருக்கு கே.ஆர்.ராமசாமி கேள்வி

செய்திப்பிரிவு

நீட் நுழைவுத்தேர்வு விவகாரத்தில் மத்திய அரசை எதிர்க்க அதிமுக அமைச்சர்கள் அஞ்சுகிறார்கள். கரோனா விவகாரத்தை வைத்து அதிமுகவினர் பணம் பார்க்கிறார்கள் என்று காங்கிரஸ் சட்டப்பேரவை குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து சட்டப்பேரவைக்கு வெளியே கே.ஆர்.ராமசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''சட்டப்பேரவை நிகழ்ச்சியில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டோம். சபாநாயகரிடம் நீட் தேர்வு சம்பந்தமான கவன ஈர்ப்புத் தீர்மானம் மீது பேச ஒவ்வொரு உறுப்பினரையும் அழைத்தனர். எதிர்க்கட்சித் தலைவர் அழைக்கப்பட்டார். அதன்பிறகு அதிமுக உறுப்பினர் இன்பதுரையைப் பேச அழைத்தார்கள்.

அவர் நீட் தேர்வு வந்தது சரியா? தவறா? என்பதைப் பற்றிப் பேசாமல், நீட் வருவதற்குக் காரணம் காங்கிரஸ்- திமுக கூட்டணி ஆட்சிதான் காரணம் என்றார். காங்கிரஸ் ஆட்சி இருக்கும்போதுதான் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதாகச் சொன்னார். அதைப் பற்றித்தான் சொன்னாரே தவிர, நீட் தேர்வை விரும்பாத மாநிலங்கள் நடத்தத் தேவை இல்லை என்ற சட்டப்பிரிவு இருந்ததைச் சொல்லாமல் விட்டார். நீட் தேர்வைக் கொண்டு வந்தது என்பதைப் பற்றி மட்டுமே பேசினார்.

பிறகு நீட் தேர்வுக்காக நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும்போது இந்த வழக்கில் பல வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். அதில் நளினி சிதம்பரமும் ஒரு வழக்கறிஞர் என்று சொன்னார். அப்படி என்றால் காங்கிரஸ் வேண்டுமென்றே இந்த நீட் தேர்வை ஆதரிக்கிறது என்று பேசினார். நாங்கள் மறுத்தோம். காங்கிரஸ் நீட் தேர்வை அனுமதிக்கவில்லை, எதிர்க்கிறது. ஒருவர் வழக்கில் ஆஜரானார் என்பதை வைத்து இவ்வாறு பேசக்கூடாது, சட்டப்பேரவையில் இல்லாத ஒருவர் குறித்துக் குற்றம்சாட்டி பேசக்கூடாது. அதை அனுமதிக்ககூடாது என்று சபாநாயகரிடம் சொன்னோம்.

ஆனால், சபாநாயகர் அதை ஏற்கவில்லை. நாங்கள் அதை ஆட்சேபனை தெரிவித்தோம். எங்களைப் பொறுத்தவரை இங்கு நீட் தேவையில்லை. தமிழக அரசைப் பொறுத்தவரை நீட் தேர்வை எதிர்த்துப் பேசத் திறமையில்லை, திராணியில்லை. ஏன் திராணியில்லை? இவர்கள் அனைவரும் ஊழல் செய்தவர்கள்.

ஊழல் செய்தவர்கள் தட்டிக்கேட்டால் மத்திய அரசு இவர்கள் பட்டியலை எடுத்து வைத்துள்ளது. இவர்கள் தட்டிக்கேட்டால் அவர்கள் நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளார்கள். அதற்கு அஞ்சி பேசத் தயங்குகிறார்கள்.

இந்த அரசு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரைச் சொல்லி வாக்கு கேட்டு வென்று அதிகாரத்தில் அமர்ந்துள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது மத்திய அரசை எதிர்த்து கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்தவர். தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏன் மத்திய அரசை எதிர்க்கத் தயங்குகிறார். நாங்கள் கடற்கரையில் உண்ணாவிரதம் இருக்கத் தயார். எங்களுடன் இணைந்து உண்ணாவிரதம் இருக்க முதல்வர் பழனிசாமி தயாரா?

இன்பதுரை என்பவர் பற்றி உங்களுக்குத் தெரியும். அவர் போட்டியிட்டது ராதாபுரம் தொகுதி. அவர் வெற்றி பெற்றாரா? என்பது தெரியாது. இவர்கள் இன்பதுரையைப் பேசவிட்டு வஞ்சம் தீர்க்கிறார்கள். இவர்களைப் பற்றிச் சொல்லவேண்டும் என்றால் நீட் தேர்வை எதிர்த்து மத்திய அரசிடம் பேச இவர்கள் தயாராக இல்லை.

இன்றைக்குக் கரோனா தமிழகத்தில் கடுமையாகப் பாதித்துள்ளது. என்னைப் பாருங்கள். கையுறை, முகக் கவசத்துடன் இருக்கிறேன். இதற்கு என்ன காரணம்? கரோனா தமிழகத்தில் முதன்முதலாகத் தாக்கியபோது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு முதல்வரிடம் சொன்னோம். அப்போது முதல்வர் என்ன சொன்னார்? 3 நாளில் கரோனா தமிழகத்தை விட்டு ஓடிப்போய்விடும் என்று சொன்னார்.

இன்று தமிழகத்தில் எத்தனை உன்னதமிக்க மனிதர்களைக் கரோனாவால் இழந்துள்ளோம். இவர்கள் கரோனாவை வைத்துப் பெரிய ஊழல் செய்கிறார்கள், கமிஷன் வாங்குகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறேன். இதற்காக தமிழக மக்களைப் பகடைக்காயாக மாற்றுகிறார்கள். இதுதான் போக்கு என்றால் கரோனாவிலிருந்து தமிழக மக்கள் தப்பிக்க முடியாது. இவர்கள் கரோனாவைப் பற்றிக் கவலைப்படவில்லை. இவர்கள் அதில் என்ன வருமானம் வரும் என்று பார்க்கிறார்கள்.

இதற்கெல்லாம் ஒரு முடிவு வரவேண்டும், மக்கள் இதற்கு முடிவுகட்டத் தயாராகிவிட்டார்கள். காங்கிரஸ் கட்சியைப்பொறுத்தவரை ராகுல் காந்தி நீட் தேர்வு தேவை இல்லை என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார். இவர்கள் ஏன் தயாராக இல்லை.

வெளி நபர்களைப் பற்றியெல்லாம் இங்கு பேச அனுமதிக்கக்கூடாது. ஆதாரமில்லாமல் பேச அனுமதிக்கக்கூடாது என்று சொன்னோம். இதற்காக எங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர்''.

இவ்வாறு கே.ஆர்.ராமசாமி பேசினார்.

SCROLL FOR NEXT