தமிழகம்

கலை, அறிவியல் கல்லூரி தொடங்க எவ்வளவு செலவாகும்? - அமைச்சர் பழனியப்பன் பதில்

செய்திப்பிரிவு

ஒரு அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்க 2 ஏக்கர் நிலமும் ரூ.8.50 கோடி வரை தேவைப்படுவதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது மார்க்சிஸ்ட் உறுப்பினர் க.பீம்ராவ், ‘‘மதுரவாயல் தொகுதியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும்’’ என வலியுறுத்தினார்.

அதற்கு பதிலளித்து அமைச்சர் பழனியப்பன் கூறியதாவது:

மதுரவாயல் தொகுதி சென்னை மாநகரையொட்டி இருப்பதால் உயர்கல்விக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. ஒரு கலை, அறிவியல் கல்லூரி அமைக்க நகரப் பகுதிகளில் குறைந்தது 2 ஏக்கரும், மற்ற பகுதிகளில் 5 ஏக்கரும் நிலம் தேவை.

இதுதவிர கட்டிடம் கட்ட ரூ.7.25 கோடி, உபகரணங்கள் வாங்க ரூ.30 லட்சம், ஊதியம் போன்ற தொடரும் செலவினமாக ஆண்டுக்கு ரூ.92 லட்சம் என மொத்தம் ரூ.8.50 கோடி வரை செலவாகும். மதுரவாயல் பகுதியில் 2 ஏக்கர் நிலம் ஏற்பாடு செய்து தந்தால் கலை அறிவியல் கல்லூரி அமைப்பது குறித்து அரசு பரிசீலிக்கும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT