தமிழகம்

இரு சடலங்களும் அவசரமாக புதைக்கப்பட்டதுபோல் தெரிகிறது: சகாயம் குழுவை சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி சந்தேகம்

கே.கே.மகேஷ்

சடலங்கள் தோண்டியெடுக்கும் பணியை முழுமையாகக் கண்காணித்த சகாயம் குழுவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி வேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முதல் சடலத்துடன், காவித் துணியும், துணியில் சுற்றப்பட்ட முழுத் தேங்காயும் கிடைத்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த உள்ளூர் மக்கள், சனிக்கிழமை இறந்தவர்களின் சடலத்துடன் தேங்காயை கட்டுவது வழக்கம். சனி பிணம் தனியே போகாது என்பதால், தேங்காய் அல்லது கோழிக்குஞ்சை உடன் புதைப்போம் என்றனர். அது மிகச்சரியாக தெற்கே தலை வைத்து புதைக்கப்பட்டிருந்தது.

அடுத்ததாக கிடைத்த இரண்டும், தென்மேற்குத் திசையில் தலை இருக்குமாறு புதைக்கப்பட்டுள்ளன. உள்ளூர்க்காரர்கள் எப்போதுமே மிகச்சரியாக தெற்கே தலை இருக்குமாறு தான் புதைப்பார்கள் என்பதால், இவை இரண்டும் அவசர கதியில் புதைக்கப்பட்டது போல தெரிகிறது.

பொதுவாக கொலையை மறைக்க விரும்புகிறவர்கள், மிக ஆழமாகக் குழி தோண்டி தான் புதைப்பார்கள். ஆனால், சந்தேகத்துக்குரிய இரு சடலங்களும் ஐந்தரை அடி ஆழத்தில்தான் இருந்தன. இந்த இடத்தின் இருபுறமும் பிஆர்பியின் குவாரி உள்ளது. வெளிநபர்கள் யாரும் இங்கே வர முடியாது. எனவே, இங்குவந்து யார் சடலத்தை அடையாளம் காணப் போகிறார்கள் என்ற மெத்தனத்தால் மேம்போக்காக புதைத்திருக்கலாம் என்று கருதுகிறேன். இவை எல்லாம் ஓய்வுபெற்ற அதிகாரி என்ற முறையில் நான் சொல்லும் தகவல்கள் தான். அதிகாரபூர்வமாக உங்களிடம் எதையும் நான் பதிவு செய்ய முடியாது என்றார்.

குழந்தை நரபலியா?

நான்காவதாக சிக்கிய குழந்தையின் சடலத்தில் மண்டையோடு மட்டுமே எஞ்சியிருந்தது. அது நரபலி கொடுக்கப்பட்ட குழந்தையா? என்ற கேள்வி எழுந்தது. அப்போது தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த உள்ளூரைச் சேர்ந்த மலைச்சாமி (36) கூறியபோது, “இது எங்கள் ஊரைச் சேர்ந்த செல்வி என்பவரது 7 மாத ஆண் குழந்தை. இதயக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இந்தக் குழந்தை, மதுரை அரசு மருத்துவமனையில் இறந்துவிட்டது. ஆம்புலன்ஸில் நேரடியாக இங்கே கொண்டுவந்து புதைத்து விட்டோம்” என்றார் அதன் பிறகே பரபரப்பு ஓய்ந்தது.

போலீஸாரை முற்றுகையிட்ட உள்ளூர் மக்கள்

சின்ன மலம்பட்டியில் சடலம் தோண்டி எடுக்கப்பட்ட இடம், வருவாய்த்துறை ஆவணங்களில் மணிமுத்தாறு என்று பதிவாகி உள்ளது. அந்த இடத்தை உள்ளூரைச் சேர்ந்த முத்தரையர் இனமக்கள் இடுகாடு மற்றும் சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர்.

அதனால், தோண்டும் பணி நடந்தபோது உள்ளூரைச் சேர்ந்த கருப்பையா (52) என்பவர் அருகில் தான் எனது தாயாரின் உடல் புதைக்கப்பட்டுள்ளது. அதை தோண்டிவிடாதீர்கள் என்று கெஞ்சினார். தோண்டமாட்டோம் என்று அதிகாரிகள் உறுதியளித்தாலும், ஓரமாக நின்று அவர் பார்த்துக் கொண்டிருந்தார்.

எங்கே நம்முடைய உறவினர்கள் உடலையும் தோண்டி எடுத்துவிடுவார்களோ என்று அஞ்சிய உள்ளூர் மக்கள் மாலை 5 மணிக்கு தோண்டும் பணி நிறைவடைந்ததால் நிம்மதியடைந்தனர். இருப்பினும் சுடுகாட்டில் தோண்டிய குழியை அப்படியே விட்டுச் செல்லக்கூடாது என்று அவர்கள் போலீஸாரை முற்றுகையிட்டனர். அவ்வாறு விட்டுச் சென்றால், உயிர்ப்பலி கேட்கும். எனவே, பிரண்டை கொடியை வேட்டியில் சுற்றி உள்ளே புதைக்க வேண்டும் என்றனர். போலீஸார் அதற்கு ஒப்புக் கொண்டதால், பிரச்சினை முடிவுக்கு வந்தது.

புகார் தர வேண்டாம்: சகாயம் வேண்டுகோள்

கிரானைட் முறைகேடு குறித்து விசாரித்து வரும் சட்ட ஆணையர் உ.சகாயம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கிரானைட் முறைகேடுகள் தொடர்பான விசாரணை முடியும் தருவாயில் உள்ளது. எனவே இனிமேல் கிரானைட் முறைகேடு தொடர்பாக பொதுமக்கள் எந்த புகார்களும் அளிக்க வேண்டாம் என அறிக்கையில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

SCROLL FOR NEXT