சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று நீட் தேர்வு குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசும்போது நீட்டுக்கு ஆதரவாக நளினி சிதம்பரம் ஆஜரானார் என்று பேசியது அமளியை ஏற்படுத்தியது. ஆட்சேபம் தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.
சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டம் இன்று தொடங்கியது. அவை தொடங்கியதும் நேரமில்லா நேரத்தின்போது நீட் மாணவர்கள் தற்கொலை குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானம் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்மீது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசினார். பின்னர் அதிமுக உறுப்பினர் இன்பதுரை பேசினார்.
அவர் பேசும்போது நீட்டைக் கொண்டு வந்தது காங்கிரஸ்தான். ப.சிதம்பரத்தின் மனைவி நளினி நீட்டுக்கு ஆதரவாக வாதாடினார் எனக் குற்றம் சாட்டி, காங்கிரஸால்தான் நீட் வந்தது எனப் பேசினார். இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். சபையில் இல்லாத ஒருவர் பற்றிப் பேசுவது தவறு என்று கூறி அவரது பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வலியுறுத்தினர்.
ஆனால் சபாநாயகர் நீக்க மறுத்துவிட்டார். இதையடுத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அவை நடுவில் வந்து கோஷமிட்டனர். இதையடுத்து காங்கிரஸ் உறுப்பினர்களைக் கூண்டோடு வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். பின்னர் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் சபைக்காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.